

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சிறுநீரக தொற்று சிகிச்சைக்காக வேலூரில் இருந்து சென்னை புழல் சிறைக்கு நேற்று திடீரென மாற்றப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த 12-6-1999-ம் ஆண்டு முதல் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதியும், கடந்த ஜனவரி 29-ம் தேதியும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்துகொண்டார். அதில், அவருக்கு சிறுநீர்ப்பையில் தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. இதற்கான சிகிச்சையை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பெற்றுக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இதற்கிடையில், தனக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பேரறிவாளன் சிறைத்துறை தலைவருக்கு மனு அளித்தார். இதனை ஏற்று வேலூர் மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு பேரறிவாளனை பாதுகாப்புடன் மாற்ற சிறைத் துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டார்.
போலீஸ் பாதுகாப்புடன்
இந்நிலையில், குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை 8.30 மணிக்கு பேரறிவாளனை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். பகல் 11 மணியளவில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து, வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி முகமது ஹனீபா கூறும்போது, ‘‘சிறுநீரக தொற்று காரணமாக அவர் சிகிச்சை பெற வேண்டி உள்ளது. எனவே, புழல் சிறைக்கு தற்காலிகமாக மாற்றியுள்ளோம். மருத்துவர்களின் பரிசோதனைக் குப் பிறகு அவர் புறநோயாளியாக சிகிச்சை பெறுவதா? அல்லது உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பதா? என முடிவு செய்யப்படும்’’ என்றார்.
மன உளைச்சல்
பேரறிவாளன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டது குறித்து அவரது தாய் அற்புதம்மாள் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘பேரறிவாளன் சிறுநீரக தொற்று காரணமாக சிகிச்சை பெறவேண்டி இருந்தது. நாங்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க விரும்புகிறோம். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் அல்லது அரசு ஏற்பாடு செய்யுமா? என முதல்வரின் தனிப்பிரிவில் கோரிக்கை மனு அளித்தேன். நாங்களே சிகிச்சை அளிக்கிறோம் என அரசு தரப்பில் தெரிவித்தனர். அதன்படி அவரை புழல் சிறைக்கு மாற்றியுள்ளனர்.
பேரறிவாளன் தனது 24-வது வயதில் ரத்த அழுத்தத்துக்கு மாத்திரை எடுத்துக்கொண்டார். வேறு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், அவர் நிரபராதி என தெரிந்தும் தொடர்ந்து சிறையில் இருப்பதால் கடந்த ஓராண்டாக கடுமையான மனஉளைச்சலில் இருந்தார். அதன்பிறகே சிறுநீரக தொற்று, முதுகு, இடுப்பு வலி, நரம்பியல் பிரச்சினைகள் ஏற்பட்டன.
பேரறிவாளன் சிகிச்சைக்கான வசதிகள் வேலூரில் இல்லை. அவர் சென்னையில் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டும். சேலத்தில் இருந்து 1999-ம் ஆண்டு வேலூர் வந்தார். நீண்ட இடைவெளிக்குபின் வெளி உலகத்தை பார்த்திருப்பார்’’ என்றார்.