Published : 25 Jun 2015 12:10 PM
Last Updated : 25 Jun 2015 12:10 PM

தமிழகத்தில் 50 மாதங்களாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை: ராமதாஸ்

ஒட்டுமொத்த இந்தியாவையும் 21 மாதங்கள் மட்டுமே நெருக்கடி நிலை ஆட்டிப்படைத்தது. ஆனால், தமிழக மக்கள் மட்டும் 50 மாதங்களாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையால் அவதிப்படுகின்றனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்திய ஜனநாயக வரலாற்றில் வெறுக்கத்தக்க அத்தியாயம் ஒன்று உண்டென்றால், அது 1975ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி நள்ளிரவில் தொடங்கி 21 மாதங்கள் நீடித்த நெருக்கடி நிலை தான். ஒட்டுமொத்த இந்தியாவையும் 21 மாதங்கள் மட்டுமே நெருக்கடி நிலை ஆட்டிப்படைத்த சூழலில், தமிழக மக்கள் மட்டும் 50 மாதங்களாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையால் அவதிப்படுகின்றனர்.

இந்தியாவில் இந்திரா காந்தி அறிவித்து செயல்படுத்திய நெருக்கடி நிலைக்கும், தமிழ்நாட்டில் ஜெயலலிதா அறிவிக்காமல் செயல்படுத்தி வரும் நெருக்கடி நிலைக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை.

இந்திரா காந்திக்கு அரசியல் மற்றும் சட்ட ரீதியாக சமாளிக்க முடியாத நெருக்கடிகள் ஏற்பட்டதால், அதிலிருந்து மீண்டு வருவதற்காக நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்தினார். ஜெயலலிதாவோ, இந்திராவுக்கு ஏற்பட்டது போன்ற நெருக்கடிகள் தமக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக நெருக்கடி நிலையை அறிவிக்காமல் செயல்படுத்தி வருகிறார். இரண்டுக்கும் இது ஒன்று மட்டுமே வித்தியாசமாகும்.

இந்திரா காந்தியின் நெருக்கடி நிலையால் ஜனநாயகம் எவ்வாறு சிறுமைப்படுத்தப்பட்டது என்பதை முன்பே விரிவாக விளக்கியிருந்தேன். இந்திய ஜனநாயகத்தின் நிர்வாக அமைப்புகளாக போற்றப்படும் குடியரசுத் தலைவர் அலுவலகம், நாடாளுமன்றம், மத்திய அமைச்சரவை, உயர் நீதித்துறை, குடிமைப் பணி அமைப்புகள் ஆகியவற்றின் அதிகாரங்கள் நெருக்கடி நிலையின் போது முடக்கப்பட்டிருந்தன. தமிழகத்தின் ஜனநாயக அமைப்புகளுக்கு இப்போது அதே நிலை தான்.

தமிழக சட்டப்பேரவைக்கு பல தனிச் சிறப்புகள் உண்டு. பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், வினாயகம் என எத்தனையோ தலைவர்களின் விவாதங்கள் நடந்த அவை அது. ஆனால், இப்போது தனிநபர் துதிபாடும் கூடமாக மாறிவிட்டது.

மக்களின் பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மார்ச் மாதத்திலேயே தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில், அதன்பின் மூன்று மாதங்களாகியும் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படவில்லை. ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரான பிறகே இந்த விவாதங்களை நடத்த வேண்டும் என்று பேரவை முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் சிறப்புமிக்க சட்டமன்றம், இப்போது 110 விதியின் கீழ் ஜெயலலிதா அறிக்கை வாசிப்பதற்கான மன்றமாக மாற்றப்பட்டு விட்டது.

அதேபோல், தமிழக அமைச்சரவை கொலு மண்டபமாகவும், அமைச்சர்கள் கொலு பொம்மைகளாகவும் மாற்றப்பட்டு விட்டனர். கொலு மேடையில் பொம்மைகள் மாற்றப்படுவதைப் போல் அமைச்சரவையில் அமைச்சர்களை நீக்குவதும், சேர்ப்பதும் ஜெயலலிதாவின் பொழுதுபோக்காக மாறிவிட்டது.

கடந்த 4 ஆண்டுகளில் 22 முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு 29 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்களாக இருப்பதற்கு எந்த தகுதியும் தேவையில்லை. சில கவிஞர்களை அமர்த்திக் கொண்டு சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் ஜெயலலிதாவை வாழ்த்தி கவிதைகள் பாட வேண்டும். கொடுக்கப்பட்ட பேரத்தை சிறப்பாக பேசி முடித்து, பெற்றுக் கொடுக்க வேண்டும் ஆகியவை தான் அமைச்சராவதற்கான தகுதி ஆகும். இதற்கு மாறாக நடந்தால் பதவி பறிக்கப்படுகிறது. மொத்தத்தில் அமைச்சர்கள் அரசின் ஆலோசகர்கள் அல்ல... பேரம் பேசுபவர்கள் என்ற நிலை உருவாகி விட்டது.

சட்டம் - ஒழுங்கு ஒருபுறம் சந்தி சிரிக்கும் நிலையில், மறுபுறம் அடக்குமுறை தலைவிரித்தாடுகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் மீது இதுவரை 200-க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேவையில்லாமல் 144 தடை உத்தரவு போடப்பட்டு மக்களின் நடமாட்டம் முடக்கப்பட்டது.

நீதி கேட்டு போராடியதற்காக என்னை கைது செய்து சிறையில் அடைத்த தமிழக அரசு, நான் விடுதலையாகிவிடக்கூடாது என்பதற்காக தொடர்பில்லாத பழைய வழக்குகளை எல்லாம் தோண்டி எடுத்து மீண்டும், மீண்டும் கைது செய்து கொடுமைப்படுத்தியது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையில் அவசர இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் உயிர் பிழைத்தேன். பாமகவைச் சேர்ந்த சுமார் 10000 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவர்களில் 134 பேர் மீது தேசியப்பாதுகாப்பு சட்டமும், குண்டர் சட்டமும் பாய்ச்சப்பட்டன. அரசுக்கு எதிராக குரல் கொடுப்போர் எந்தக்கட்சியாக இருந்தாலும் அவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

அதிமுக அரசின் இந்த அடக்குமுறைகளைத் தட்டிக் கேட்க எந்த ஊடகங்களும் முன்வரவில்லை என்பது தான் மிகுந்த வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. உண்மையில் ஊடகங்கள் தான் முதன்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டு ஆட்சியாளர்களின் தவறுகளையும், ஊழல்களையும் அம்பலப்படுத்த வேண்டும். ஆனால், ஏனோ தமிழக அரசின் தவறுகளைக் கண்டால் ஊடகங்கள் முகத்தைத் திருப்பிக் கொள்கின்றன.

இந்திரா காந்தி நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்திய போது ஊடகங்களுக்குத் தணிக்கைக் கொண்டுவரப்பட்டது. எனினும், தணிக்கையாளர்கள் கண்களில் மண்ணைத் தூவி விட்டு அரசுக்கு எதிரான செய்திகளை சில ஊடகங்கள் மறைமுகமாகவாவது மக்களுக்கு உணர்த்தி வந்தன. ஆனால், இன்றோ தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டுப் போட்டுக்கொண்டு ஆளுங்கட்சியின் தவறுகளை அம்பலப்படுத்த மறுக்கின்றன.

தமிழ்நாட்டில் பலமுறை ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கும், ஊழல்கள் அம்பலமாவதற்கும் ஊடகங்கள் தான் முக்கியக் காரணமாக இருந்துள்ளன. தமிழகத்திலுள்ள ஊடகங்களின் வலிமையும், அறமும் ஒப்பிட முடியாத அளவுக்கு இருந்தன. ஆனால், மலைகளை தகர்த்த ஊடக உளிகள் இப்போது அம்மிக் கொத்துவதில் ஆர்வம் காட்டுவது தான் அத்தனை அவலங்களுக்கும் காரணமாகும்.

அரசின் தவறுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து மக்களிடம் விழிப்பை ஏற்படுத்துவது ஊடகங்களால் மட்டுமே சாத்தியமான ஒன்றாகும். நான்காவது தூணான ஊடகங்கள் ஜனநாயகக் கட்டிடத்தைத் தாங்க வேண்டிய கடமையை சரியாக செய்யாவிட்டால் அக்கட்டிடம் தகர்ந்து விடும். அதன்விளைவு நெருக்கடி நிலையைவிட மோசமாக இருக்கும்.

அறிவிக்கப்படாத நெருக்கடியின் வெளியில் தெரியாத நிர்பந்தங்கள் காரணமாக ஊடகங்கள் இப்போது அமைதி காக்கலாம். ஆனால், சரியான நேரத்தில் தமிழ்நாட்டு ஊடகங்கள் ஜனநாயகக் கடமையைச் செய்யும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது.

நெருக்கடி நிலைக்குப் பிறகு வந்த 1977-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்திராகாந்திக்கு ஏற்பட்ட முடிவு தான் 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஏற்படும் என்பது மட்டும் உறுதி. எனவே, ஊடகங்கள் அச்சமின்றி தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற முன்வர வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x