

கோயம்பேடு மார்கெட் வியாபாரிகள் விண்ணப்பித்தும் கடைகளின் உரிமத்தை மார்க்கெட் நிர்வாகம் புதுப்பிக்காமல் இருப்பதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தம் 3,157 கடைகள் உள்ளன. இதை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) கீழ் கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழு நிர்வகித்து வருகிறது. அங்குள்ள கடைகளுக்கான உரிமத்தையும் மார்க்கெட் நிர்வாகக் குழு வழங்கி வருகிறது. வியாபாரிகள் தங்களின் கடைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் செலுத்தி உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டுக்கான உரிமம் பெற 1000-க்கும் மேற்பட்ட கடைக் காரர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களுக்கு இதுவரை உரிமம் வழங்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. இது தொடர் பாக மார்கெட் நிர்வாகக் குழு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘விண்ணப்பித்த அனைவருக்கும் ஒரு வாரத்துக்குள் உரிமம் வழங்கப்படும்’’ என்றார்.