

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தமிழகம் முழுவதும் ரூ.123 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 90 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.13.85 கோடி மதிப்பிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.
நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சி, நெல்லை மாவட்டம் பத்தமடை பேரூராட்சி, பாளையங்கோட்டை ஒன்றியம், கீழ்நத்தம் ஊராட்சி, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சி, தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டங்கள் என ரூ.73 கோடியே 72 லட்சத்து 28 ஆயிரம் செலவில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை முதல்வர் தொடங்கிவைத்தார்.
தஞ்சையில் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநரகம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, துறையூர், பரமக்குடி, ஒட்டன்சத்திரம் ஆகிய நகராட்சிகளில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலக கட்டிடங்கள், கும்மிடிப்பூண்டி, களக்காடு, திருக்குறுங்குடி, கோத்தகிரி, எழுமலை ஆகிய பேரூராட்சிகளில் கட்டப்பட்டுள்ள அலுவலக கட்டிடங்கள் மற்றும் நெல்லை சாந்தி நகரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கட்டிடம் என ரூ.20.78 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களையும் முதல்வர் திறந்துவைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம்; ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி, நீலகிரி மாவட்டம் நெல்லியாளம், திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஆகிய நகராட்சிகள் மற்றும் திருப்பூர் மாவட்டம் ருத்ராவதி பேரூராட்சியில் ரூ.2.90 கோடியில் கட்டப்பட்ட 5 பேருந்து நிலையங்களை முதல்வர் திறந்துவைத்தார்.
மேலும், கிருஷ்ணகிரி- கெலமங்கலம், தஞ்சை - மேலத்திருப்பன்துருத்தி, வல்லம், பெருமகளூர் மற்றும் திருக்காட்டுப்பள்ளி, திருவாரூர் – நன்னிலம், திருச்சி –மண்ணச்சநல்லூர், முசிறி, தொட்டியம், மேட்டுப்பாளையம், சமயபுரம் கண்ணனூர், தாத்தையங்கார்பேட்டை, சிறுகமணி, பூவாளூர், பொன்னம்பட்டி, பெரம்பலூர் – குரும்பலூர், புதுக்கோட்டை - கறம்பக்குடி மற்றும் கீரமங்கலம், அரியலூர் - வரதராஜன்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் ரூ.6.08 கோடியில் கட்டப்பட்ட 47 நவீன சுகாதார வளாகங்களையும் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மேற்கு தாம்பரத்தில் ரூ.2.24 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அம்பேத்கர் திருமண மண்டபம், கிழக்கு தாம்பரத்தில் ரூ.1.48 கோடியில் புதுப்பிக்கப்பட்ட காந்தி பூங்கா, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சியில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட வணிக வளாகம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் ரூ.50 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை, கோவை மாநகராட்சி உக்கடம் பெரியகுளம் கரையில் ரூ.4.95 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இலகுரக வாகனப் பாதை மற்றும் பாலக்காடு சாலை- ஆத்துப்பாலம் சந்திப்பு முதல் மாநகராட்சி எல்லை வரையில் 5.10 கி.மீ. நீளத்துக்கு ரூ.2 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயில் 408 எல்இடி தெருவிளக்குகள் ஆகியவற்றையும் மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் திறந்துவைத்தார்.
இப்படி தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் ரூ.123 கோடியே 8 லட்சத்து 88 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்தும், தொடங்கியும் வைத்துள்ளார்,
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் க.பனீந்திர ரெட்டி, குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் சா.விஜய ராஜ்குமார், நகராட்சி நிர்வாக இயக்குநர் கோ.பிரகாஷ், பேரூராட்சிகள் இயக்குநர் ராஜேந்திர ரத்னூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.