

செம்மரக் கடத்தலுக்கு பயன்படுத் தப்பட்ட 2 வேன்களை ஆம்பூர் தாலுகா போலீஸார் பறிமுதல் செய்தனர். இதில் ஒரு வேனில் தக்காளி கூடைகளுக்கு அடியில் கடத்தி வரப்பட்ட ஒரு டன் எடை யுள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் சின்னபையன் (45) செம்மரக் கடத்தல் விவகாரத்தில் கடந்த மாதம் 26-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சத்துவாச்சாரியைச் சேர்ந்த நாகேந்திரன், அவரது மனைவி ஜோதிலட்சுமி உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் வேலூர் மாவட்ட கலால் டிஎஸ்பி தங்கவேலு 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இதையறிந்த டிஎஸ்பி தங்கவேலு தலைமறைவானார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டும் இதுவரை அவர் இருக்கும் இடம் புதிராகவே உள்ளது. டிஎஸ்பி தங்கவேலுவை தேடி தனிப்படை போலீஸார் சென்னை, பெங்களூரு, திருச்சி, நெல்லை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் முகாமிட்டுள்ளனர்.
மேலும், டிஎஸ்பி தங்கவேலு தலைமறைவானபோது அரசுக்குச் சொந்தமான வாகனம் (ஜீப்), கை துப்பாக்கி, வாக்கிடாக்கி உள்ளிட்ட பொருட்களை அவர் உடன் எடுத்துச்சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரது செல்போன் எண்ணை கொண்டு போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தியதில் எந்த முன்னேற்றமும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்நிலையில், கைது செய்யப் பட்ட நாகேந்திரன் கொடுத்த தகவல்படி ஆம்பூர் தாலுகா போலீஸார் செம்மரக் கடத்தல் வழக்கில் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர். மேலும் கலால் டிஎஸ்பி தங்கவேலு உடன் செம்மரக் கடத்தல் கும்பல், இடைத்தரகர்கள் என 70-க்கும் மேற்பட்டவர்களின் பட்டியலை தனிப்படை போலீஸாரிடம் நாகேந் திரன் கொடுத்துள்ளார்.
இதை வைத்து டிஎஸ்பியை தேடும் பணியை தனி போலீஸார் தீவிரப் படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே, நாகேந்திரன் கொடுத்த தகவல்படி வேலூர் அடுத்த அலமேலுரங்காபுரத்தில் செம்மரக் கட்டைகள் கடத்த பயன்படுத்தப்பட்டு வந்த வேனை ஆம்பூர் தாலுகா போலீஸார் நேற்று முன்தினம் இரவு வேலூரில் பறிமுதல் செய்தனர்.
மேலும், ஆம்பூர் அடுத்த தோட்டாளம் பகுதியில் தாலுகா போலீஸார் நேற்று காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த லோடு வேனை மடக்கி சோதனையிட்டனர். அதில் தக்காளி கூடைகளுக்கு அடியில் ஒரு டன் எடையுள்ள செம்மரம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக, வேன் ஓட்டுநர் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.