

தொட்டில் கயிறு கழுத்தில் சுற்றியதால் மூளைக்கு ரத்தம் செல்லாமல் சுயநினைவை இழந்த 9 வயது சிறுவனை, ‘கோட் ப்ளூ ஆபரேஷன்’ சிகிச்சையில் பெரியகுளம் அரசு மருத்துவர்கள் காப்பாற்றினர்.
பெரியகுளம் அருகே தென்க ரையைச் சேர்ந்த திரவியம் மகன் சபரி (9). வீட்டில் குழந்தைகள் தூங்கும் தொட்டிலில் சபரி ஆடியுள்ளான். அப்போது தொட்டில் கயிறு அவனது கழுத்தை சுற்றி இறுக்கியதால் மயக்கமடைந்தான். ஆபத்தான நிலையில் சிறுவனை உறவினர்கள், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது மருத்துவமனை பணியாளர், மருத்துவமனை மைக்கில் ‘கோட் ப்ளூ’ எனக் கூறி, மருத்துவர்களை சிறுவன் சேர்க்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வரும்படி அறிவித்தனர்.
அடுத்த மூன்றே நிமிடத்தில் சிறுவன் அனுமதிக்கப்பட்ட வார்டில் மூன்று மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் வந்து சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.
தொட்டில் கயிறு கழுத்தை இறுக்கியதால் நரம்பு பாதிக்கப் பட்டு, மூளைக்கு ரத்தம் செல்வது குறைந்ததால் சிறுவன் சுய நினைவை இழந்திருந்தான்.
மருத்துவர் செல்வராஜ் தலைமையில் மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சியால் ஒரு மணி நேரம் போராடி, நரம்பை சரி செய்து மூளைக்கு ரத்தம் செல்ல வைத்தனர். அதனால், அபாயக்கட்டத்தில் இருந்து சிறுவன் உயிர் பிழைத்து நலமாக உள்ளான்.
5 நிமிடம் மருத்துவமனைக்கு வர தாமதித்திருந்தாலோ அல்லது மருத்துவர்கள் 5 நிமிடம் தாமதமாக வந்திருந்தாலோ சிறுவனை காப்பாற்றியிருக்க முடியாது என மருத்து வர் செல்வராஜ் தெரிவி த்தார்.
இதுகுறித்து தேசிய தரக் கட்டுப்பாட்டு வாரிய உதவி ஒருங்கிணைப்பாளர் கணேஷ் கூறும்போது, தமிழகத்தில் 32 மருத்துவமனைகள் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெறுவதற்காக பரிந்து ரைக்கப்பட்டுள்ளன.
தற்போது நாமக்கல், சோளிங்க நல்லூர், பத்மநாதபுரம் அரசு மருத்துவமனைகள் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்றுவிட்டன. அடுத்தகட்டமாக பெரியகுளம், அருப்புக்கோட்டை, ஈரோடு, ரங்கம், புதுக்கோட்டை, கடலூர் உட்பட 11 அரசு மருத்துவமனைகள் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெறும் தருவாயில் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் அவசர காலத்தில் ஒவ்வொரு சிகிச்சைக்கும் ஒவ்வொரு கோட் வேர்டு வைத்துள்ளனர். இதில் ‘கோட் ப்ளூ ஆபரேசன்’தான் அபாயக்கட்டத்தில் இருந்து சிறுவனின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது.
இந்த கோட் வேர்ட் மைக்கில் அறிவிக்கப்பட்டதும், மருத்துவர்கள், அழைக்கப்பட்ட இடத்துக்கு உடனடியாக வந்து உயிருக்கு போராடுபவர்களைக் காப்பாற்ற தேவையான சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என்றார்.