

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை மீது நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். அறிவியல்ரீதியாக விசாரணை நடத்தாமல், ஆங்கிலேயர் காலத்து முறைப்படி விசாரணையை தொடர்வதால் எந்த பலனும் ஏற்படாது என நீதிபதி கூறினார்.
திருச்சியை சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. இவரது சகோதரர் ராமஜெயம், கடந்த 22.3.2012-ல் காவிரி ஆற்றின் ஓரத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ராமஜெயம் கொலை குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். சிபிசிஐடி விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி ராமஜெயத்தின் மனைவி லதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த மார்ச் 10-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி போலீஸாருக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் அரசு வழக்கறிஞர் மயில்வாகன ராஜேந்திரன் வழங்கினார். தொடர்ந்து அவர் வாதிடும்போது, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மேலும் 2 மாதம் அவகாசம் தர வேண்டும் என்றார்.
அரசு வழக்கறிஞரின் கோரிக் கையை ஏற்க மறுத்த நீதிபதி, கடந்த மூன்றரை ஆண்டுகளாக குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. யார் குற்றவாளி என்பதைக்கூட முடிவு செய்ய வில்லை. ஆனால், நீதிமன்றத்தில் ஒவ்வொரு முறையும் கொலை தொடர்பாக முக்கிய தகவல் கிடைத்துள்ளது என தவறாமல் அறிக்கை மட்டும் தாக்கல் செய்கிறீர்கள். விசாரணையில் இன்னும் ஆங்கிலேயர் காலத்து முறைகளைத்தான் கையாள் கின்றனர். விஞ்ஞானப்பூர்வமாக விசாரணை நடத்துவதில்லை. தற்போது குற்றவாளிகள் விரைவாக செயல்படுகின்ற னர். அனைத்து தொழில்நுட்பங் களையும் தெரிந்து வைத்துள்ளனர்.
அறிவியல்பூர்வமாக விசாரித் தால்தான் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும். இந்த வழக்கில் தற்போது தடயங்கள் அழிக்கப்பட்டிருக்க வாய்ப்புள் ளது. சிபிசிஐடி விசாரணை சரியாக நடைபெறவில்லை. மூன்றரை ஆண்டுகளாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாதபோது, மேலும் அவகாசம் அளிப்பதால் பலன் ஏற்படாது என்றார்.
மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதிடும்போது, ஏன் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளனர் எனத் தெரியவில்லை என்றார். சிபிஐ வழக்கறிஞர் ஜெயக்குமார் வாதிடும்போது, சிபிஐ பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து வருகிறது. சிபிஐக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது. சிபிசிஐடி போலீஸாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் தரலாம் என்றார்.
இதையடுத்து, அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால், விசாரணையை இன்றைக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அப்போது, ராமஜெயம் வழக்கின் விசார ணையை வேறு அமைப்புக்கு மாற்றுவது தொடர்பாக அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.