Published : 05 Jun 2015 08:34 PM
Last Updated : 05 Jun 2015 08:34 PM

அவசரமாக முதல்வர் பொறுப்பேற்றவர் யார்? எப்படிப்பட்டவர்? - கருணாநிதி விளக்கம்

அவசர அவசரமாக முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளவர் யார், எப்படிப்பட்டவர் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள எத்தனையோ ஆதாரங்கள், புள்ளி விவரங்கள்; அவற்றிலே எதைச் சொல்வது? எதை விடுவது? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று கருணாநிதி கடித வடிவில் எழுதியுள்ள அறிக்கையில், ''ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டுமென்று, கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் 1-6-2015 அன்று முடிவெடுக்கப்பட்டு, தமிழகத்திலே வெளிவரும் நாளேடுகள் அனைத்திலும் முதல் பக்கத்தில் அந்தச் செய்தி பெரிதாக வெளிவந்துள்ளது.

குறிப்பாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தம்பி ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழ் மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரெல்லாம் கர்நாடக அரசின் முடிவினை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநிலச் சட்டத் துறை அமைச்சர், டி.வி. ஜெயச்சந்திரா கூறும்போது, "அரசு வழக் கறிஞர் பி.வி. ஆச்சார்யா, அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார், சட்டத் துறைச் செயலாளர் சங்கப்பா ஆகியோர் அளித்த பரிந்துரையின் பேரில், ஜெயலலிதா வழக்கில் மேல் முறையீடு செய்வது என அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்யுமாறு முதல்வர் சித்தராமையா உத்தரவிட் டுள்ளார். கர்நாடக அரசின் இந்த முடிவில் எவ்வித அரசியல் பழிவாங்கல் எண்ணமும் இல்லை. முழுக்க முழுக்க சட்ட ரீதியான அம்சங்களின் அடிப்படையிலேயே மேல்முறையீடு செய்வது உறுதி செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசின் வழக் கறிஞராக பி.வி. ஆச்சார்யா ஆஜராகி வாதிடுவார். அவருக்கு உதவியாளராக சந்தேஷ் சவுட்டா செயல்படுவார்" என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக அரசின் முடிவு குறித்து, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகப் போகின்ற வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா அளித்த பேட்டியில், "919 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் 800 பக்கங்களில் வழக்கின் பழைய சம்பவங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. 119 பக்கங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குறைகள் உள்ளன. அந்தக் கோணத்தில் பார்த்தாலும், நான்கு பேரும் வழக்கில் இருந்து விடுதலையாக வாய்ப்பில்லை.

தீர்ப்பில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவேண்டுமென்று கர்நாடக மாநிலச் சட்டத் துறை முதன்மைச் செயலாளர், மாநில அரசு தலைமை வக்கீல் ரவிவர்ம மார் ஆகியோருக்கு சிபாரிசு கடிதம் எழுதினேன். எனது நியாயமான கோரிக்கையை அரசு பரிசீலனை செய்தது. உச்ச நீதிமன்றத்தில் எனது திறமையை வெளிப்படுத்தி கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்குத் தடை கேட்போம். அந்தத் தீர்ப்பை ரத்து செய்ய வைத்து, பெங்களூர் தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ய வைப்பேன்"என்று தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் இந்த 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு பற்றி முதன் முதலில் நாம் எதுவும் சொல்லிவிடவில்லை. நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளியிடப்பட்ட விவரப்படி, ஜெயலலிதா முதல் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, அவருக்கு இருந்த சொத்து மதிப்பு, அதாவது 1-7-1991 அன்றைய தேதியில் 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய். (1991ஆம் ஆண்டு முதல்1996ஆம் ஆண்டு மே திங்கள் வரையில் ஜெயலலிதா தான் தமிழகத்தின் முதல் அமைச்சர். ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை ஐந்தாண்டுகள் அனுபவித்து முடிந்த பிறகு) 30-4-1996 அன்று ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395 ரூபாயாகும்.

நாடாளுமன்றத்தில் தரப்பட்ட இந்தப் புள்ளி விவரங்களின் அடிப்படையில்தான் வழக்கே தொடங்கியது. தனி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, நீதிபதி குன்ஹாவிடம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் இந்தச் சொத்து மதிப்பில் ஒருசிலவற்றைக் குறைக்க வேண்டுமென்று வைக்கப்பட்ட முறையீடுகளின் அடிப்படையில், 66 கோடி ரூபாய் சொத்து என்பதை 53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 ரூபாய் என்று குறிப்பிட்டுத்தான் தனது தீர்ப்பினை வழங்கினார்.

அதை எதிர்த்துத்தான் ஜெயலலிதா தரப்பினர் மேல் முறையீடு செய்தார்கள். மேல் முறையீட்டு வழக்கினை விசாரித்த நீதிபதி குமாரசாமிதான் குன்ஹா குறிப்பிட்ட 53 கோடி ரூபாய் சொத்து என்பதை, 37 கோடியே 59 இலட்சத்து 2 ஆயிரத்து 466 ரூபாய் மதிப்புள்ள சொத்துகள்தான் இருப்பதாகக் குறைத்தார்.

இந்தச் சொத்துகளை வாங்க ஜெயலலிதா தரப்பினருக்கு 34 கோடியே 76 இலட்சத்து 65 ஆயிரத்து 654 கோடி ரூபாய் வருமானம் வந்ததாகவும், அந்த வருமானத்தைச் சொத்து மதிப்பிலே கழித்துவிட்டால், வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 82 லட்சத்து 36 ஆயிரத்து 812 ரூபாய் சொத்துதான் சேர்த்திருப்பதாகவும், அந்த வருமானத்திற்கு அதிகமான சொத்து, ஜெயலலிதாவின் மொத்த வருமானத்தில் பத்து சதவிகிதத் திற்கும் குறைவாக 8 சதவிகிதம் என்ற அளவில் மட்டும் இருப்பதால் அவருக்குத் தண்டனை விதிக்கத் தேவையில்லை என்று இறுதியிலே கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.

நீதிபதி குமாரசாமி தெரிவித்துள்ள இந்தப்புள்ளி விவரங்கள் உண்மையாக இருக்குமேயானால்கூட, அந்தத் தீர்ப்பை எவரும் ஏற்றுக் கொள்வர்; இந்த அளவுக்குப் பெரும் விவாதங்கள் எழுந்திருக்காது!

ஜெயலலிதாவின் வருமானம் பற்றி நீதிபதி குமாரசாமி தீர்ப்பிலே கூறும் போது, ஜெயலலிதா தரப்பினருக்கு 34 கோடியே 76 லட்சத்து 65 ஆயிரத்து 654 ரூபாய் வருமானம் வந்ததில், வங்கியிலிருந்து மட்டும் 24 கோடியே 17 லட்சத்து 31 ஆயிரத்து 274 ரூபாய் கடன் பெற்றதாகத் தெரிவித்ததோடு, அந்தத் தொகை யார் யார் பெயரால் எவ்வெப்போது கடனாக வாங்கப்பட்டது என்றும் விவரித்திருக்கிறார். அவர் விவரித்துள்ள அந்தப் புள்ளி விவரங்களைக் கூட்டினால் 10 கோடியே 67 லட்சத்து 36 ஆயிரத்து 274 ரூபாய்தான் வருகிறது.

பத்து கோடியே 67 இலட்சம் மட்டுமே வருமானம் வங்கிக் கடன்கள் மூலமாக வந்திருக்க, அதை 24 கோடியே 17 லட்சம் ரூபாய் வருமானம் வந்திருப்பதாகத் தவறாக மிகைப்படுத்தி கூறி உயர் நீதிமன்ற நீதிபதியே ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பு அளித்திருக்கிறார் என்றால், அது முறையான, நியாயமான தீர்ப்பா? இதைத்தான் இந்தியாவே கேட்கிறது.

ஆனால், இந்தத் தீர்ப்பால் பயன்பெற்றவர்கள், இந்தத் தவறு பற்றி இதுவரை விளக்கம் தந்திருக்கிறார்களா என்றால் கிடையாது. நீதிபதி கூட்டுத் தொகையில் தவறு செய்ததால், ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 10 சதவிகிதத்திற் கும் குறைவு என்று கூறி அவரை விடுதலை செய்திருக்கிறார்.

நீதிபதி கூட்டுத் தொகைக் கணக்கை முறையாகச் செய்திருந்தால், ஜெயலலிதா தன் வருமானத்திற்கு அதிகமாகச் சேர்த்த சொத்தின் மதிப்பு 76 சதவிகிதமாகும். அதன்படி ஜெயலலிதா தண்டனைக்கு உரியவர் ஆகிறாரா அல்லவா? இன்னும் சொல்லப்போனால், இன்று ஒரு ஆங்கில நாளிதழில், கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர், பி.வி. ஆச்சார்யா கொடுத்துள்ள பேட்டியில், சட்ட ரீதியாகவும், கணக்கியல் அடிப்படை யிலும், உண்மை விவரங்களைக் கணக்கிட்டுப் பார்த்ததிலும், ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக 200 சதவிகிதம் சொத்து சேர்த்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இதற்கு அவர்களுடைய பதில் என்ன?

இத்தனை நாட்களாக எல்லோருடைய மனதிலும் எழுந்துள்ள இந்த முக்கியமான கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் இருப்பதிலிருந்தே, அவர்கள் குற்றம் புரிந்திருப்பது ஊர்ஜிதமாகிறதா அல்லவா?

தமிழக உயர் நீதிமன்ற நீதிபதி பதவி வகித்து, இரண்டு நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற நீதியரசர் தனபாலன், வழியனுப்பு விழாவில் பேசும்போது, "நீதித் துறை என்பது நிரந்தரமானது. உயர் நீதிமன்றம் நிரந்தரமானது. நீதிபதிகள், வக்கீல்கள் வருவார்கள், போவார்கள். இந்த அமைப்புக்கு எந்த ஒரு கெட்ட பெயரும் ஏற்படாதவாறு நாம் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். நீதித் துறை மீதான நம்பிக்கையைப் பொதுமக்கள் இழந்துவிட்டால், அதைவிட மோசமான நிலை வேறு எதுவும் இருக்க முடியாது.

இந்த நீதித் துறை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நாம் செயல்பட வேண்டும். நீதித் துறைக்கு வெளியில் உள்ளவர்களால் எந்த ஆபத்தும் ஏற்படாது. நீதித் துறைக்குள் இருக்கின்ற நம்மைப் போன்றவர்களால்தான் ஆபத்து வரும். எனவே, நாம் எச்சரிக் கையுடன் செயல்பட வேண்டும்" என்று நீதிபதி தனபாலன் எடுத்துச் சொன்ன கருத்து, இப்போது நாட்டில் தோன்றியுள்ள நிலைமைக்கு எவ்வளவு பொருத்தமானது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நீதிபதி குமாரசாமி , தனது தீர்ப்பில், பக்கம் 853-ல்,முதல் குற்றவாளியான ஜெயலலிதா, 2 கோடியே 15 இலட்சம் ரூபாயை, பரிசுத் தொகையாகப் பெற்றதாக உரிமை கோருகிறார். ஜெயலலிதா தன்னுடைய வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தின் போதும், தன்னுடைய பிறந்த நாளின் போதும் கட்சித் தொண்டர்கள், நண்பர்கள் மற்றும் வேண்டியவர்களிடமிருந்து பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.

வெளிநாட்டிலிருந்து 77 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வந்ததாகவும் உரிமை கோரியிருக்கிறார். இந்த அம்சங்களை யெல்லாம் கருத்தில் எடுத்துக்கொண்டு, பரிசுகளைப் பெற்றதன் மூலம் ஜெயலலிதாவுக்கு வந்த வருமானம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் என்று கணக்கிலே எடுத்துக் கொள்கிறேன்" என்று நீதிபதி குமாரசாமி கூறியிருக்கிறார்.

ஒரு பொது அரசு ஊழியர் அன்பளிப்பு பெறுவது என்பது சட்டத்துக்குப் புறம்பானது. முதலமைச்சர் என்கிற முறையில், ஜெயலலிதா ஒரு பொது அரசு ஊழியராகக் கருதப்படுபவர். அவர் தனக்கு அன்பளிப்பாக 2 கோடியே 15 லட்சம் ரூபாய் வருவாய் வந்ததாகவும் - அதிலும் 77 லட்ச ரூபாய் வெளி நாட்டிலிருந்து அன்பளிப்பாக வந்ததாகவும் ஒப்புக் கொண்டு கணக்கு கொடுக் கிறார். நீதிபதி குமாரசாமியும் அதைக் கணக்கிலே எடுத்துக் கொள்வதாகவும் ஒன்றரை கோடி ரூபாய் பரிசுகள் மூலமாக வருவாய் வந்திருப்பதாகவும் தீர்ப்பிலேயே தெரிவித்திருக்கிறார் என்றால், பொது ஊழியரான ஜெயலலிதா கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அன்பளிப்பாகப் பெற்றது நியாயம்தானா? சட்டப்படி சரியானது தானா?

நீதிபதி அதை ஏற்றுக் கொண்டு, அதனை முறையான வருவாயாக கணக்கிலே எடுத்துக் கொண்டு, ஜெயலலிதாவின் தண்டனையை ரத்து செய்தது முறையானதுதானா? அதே நேரத்தில், தனியார் தொலைக்காட்சி ஒன்று முறையாக கடன் பத்திரங்கள் அடிப்படையில், வங்கிக் காசோலை மூலமாகப் பணத்தைப் பெற்று, அந்தக் கடனையும் வட்டியோடு காசோலையாகவே திருப்பி அளித்து, வருமான வரி கணக் கிலும் அதனை முறையாகக் காட்டிய பிறகும், அந்தத் தொலைக்காட்சி மீதும், அதன் இயக்குநர்கள் மீதும் வழக்கு நடைபெற்று வருவதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!

கூட்டல் கணக்கில் நீதிபதி குமாரசாமி செய்த தவறை மேலே குறிப்பிட்டேன் அல்லவா? அதிலே நடந்திருக்கும் இன்னொரு வேடிக்கையையும் கூறுகிறேன், கேளுங்கள். ஜெயலலிதா தரப்பினர் வங்கியிலே கடன் பெற்றதாகக் குறிப்பிட்டிருப்பதில், இரண்டாவதாக உள்ளதுதான் கொடநாடு எஸ்டேட்டுக்காக வேளாண்மைக் கடன் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் குணபூசனி என்பவர் பெயரில் வாங்கப்பட்டதாகும்.இதை ஜெயலலிதாவின் வருமானமாக எவ்வாறு கணக்கிலே எடுத்துக் கொள்ளப்பட்டது? இந்தக் கொடநாடு எஸ்டேட் எவ்வாறு வாங்கப்பட்டது என்பதே தனி பிரச்சினை. அதனை சுமார் பத்து கோடி ரூபாய் அளவுக்குத் தான் அப்போது வாங்கப்பட்டது. இப்போது அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அந்த கொடநாடு எஸ்டேட் தேயிலைத் தோட்டம் சுமார் 900 ஏக்கர் பரப்புடையது. அதன் இன்றைய குறைந்தபட்ச சந்தை விலை ஒரு ஏக்கர் ஐந்து கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டால்கூட, 4,500 கோடி ரூபாய் மதிப்புடையதாகும்.

உண்மையான இந்த விவரங்களையெல்லாம் ஒளித்து, தாங்கள் ஏதோ புனிதர்கள் போல உலகத்தை ஏமாற்ற எப்படியோ ஒரு தீர்ப்பினைப் பெற்று, அதன் அடிப்படையில் அவசர அவசரமாக முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளவர் யார், எப்படிப்பட்டவர் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள எத்தனையோ ஆதாரங்கள், புள்ளி விவரங்கள்; அவற்றிலே எதைச் சொல்வது? எதை விடுவது?'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x