மோட்டார் சைக்கிளை உரிமையாளரிடம் வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது

மோட்டார் சைக்கிளை உரிமையாளரிடம் வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது
Updated on
1 min read

விருதுநகரில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் கட்டப்பொம்மன் தெருவை சேர்ந்த ராமமூர்த்தி. இவர் கடந்த ஜூன் 3-ம் தேதி விருதுநகர் பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மதுரை திரும்பினார். அப்போது மோட்டார் சைக்கிள் திருடுபோனது தெரிய வந்தது. இது குறித்து விருதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து திருடுபோன மோட்டார் சைக்கிள் ராமநாதபுரத்தில் மீட்கப்பட்டு கேணிக்கரை காவல் நிலையத்தில் உள்ளதாக தெரிந்தது. அதை மீட்க கேணிக்கரை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முருகனைச் சந்தித்த போது ரூ. 3 ஆயிரம் கொடுத்து விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துச்செல்லுமாறு ராமமூர்த்தியிடம் கூறினாராம். அவர் லஞ்சம் அளிக்க விரும்பவில்லை.

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் ராமமூர்த்தி புகார் செய்தார். அவரிடம் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை கொடுத்து இன்ஸ்பெக்டர் முருகனிடம் கொடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறினர்.

சனிக்கிழமை கேணிக்கரை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முருகனை சந்தித்து ரூ.3 ஆயிரம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி தங்கவேல், ஆய்வாளர்கள் சந்திரசேகரன், ஜானகி ஆகியோர் முருகனை கையும் களவுமாக கைது செய்தனர்.

மேலும் லஞ்சமாக கொடுத்த ரூ.3 ஆயிரம் மற்றும் முருகனின் பையில் இருந்த பத்தாயிரத்து ஐநூறு ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in