

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள திருக்கட்டளை கிராமத்தில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. இதில், ப.சிதம்பரம் பேசியது:
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து ஓராண்டாகிவிட்டது. மொத்த ஆட்சியில் 20 சதவீத பதவிக்காலம் முடிந்த நிலை யில், தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை சதவீதம் நிறைவேறியுள் ளது என்பதை நாட்டு மக்களுக்கு பிரதமர் விளக்க வேண்டும்.
தேர்தலின்போது ‘விரைவில் நல்ல காலம் பிறக்கும்’ என்று முழக்கமிட்டனர் பாஜக-வினர். ஆனால், தற்போது விவசாயி கள் வாழ்விழந்து வேதனைக் குள்ளாகியுள்ளனர்.
100 நாள் வேலைத்திட்டம் 40 நாட்களாக சுருங்கிவிட்டது. அதிலும், முதியோர், விதவை, ஊனமுற்றோருக்கு பணி வழங்குவதில்லை.
கடந்த 15 நாட்களாக, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக-வைச் சேர்ந்த முதல்வர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. “மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது மவுன மாகவே இருந்தார்” என்று குற்றம் சுமத்திய பிரதமர் மோடி, கடந்த 15 நாட்களாக ஏன் வாய் திறக்கவில்லை?. எந்த குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளிக்காமல் ஏன் மவுனமாகவே இருக்கிறார்?
இதுபோன்ற செயல்பாடு களால் பாஜக ஆட்சியின் அடுத்த 4 ஆண்டுகளும் வீணாகி விடக் கூடாது என்பதே எனது கவலை.
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றவர், நன்றி சொல்லக்கூட இங்கு வரவில்லை. கடந்த ஓராண் டில் ஒருமுறைகூட நாடாளு மன்றத்தில் பேசவில்லை. மத்திய அரசின் எந்த திட்டத்தையும் இந்த தொகுதிக்கு கொண்டு வரவில்லை. காழ்ப் புணர்ச்சியாலோ, வெறுப்பாலோ இதைக் கூறவில்லை. செயல்பாடு இல்லாமல் இருக்கிறாரே என்ற கவலைதான்.
130 ஆண்டு வரலாறு கொண்ட காங்கிரஸ் கட்சியை யாராலும் அழித்துவிட முடியாது. எப்போதும் நாங்கள் மக்கள் பக்கமே இருப்போம். முடிந்தவரை மக்களுக்கு உதவி செய்வோம் என்றார்.