Published : 26 Jun 2015 11:48 AM
Last Updated : 26 Jun 2015 11:48 AM

பொள்ளாச்சி ஊராட்சிப் பள்ளிகளில் முடிவடையாத கழிப்பிடம் கட்டும் பணியை முடிந்ததாக சான்றளிக்க நிர்பந்தம்: அதிகாரிகள் மீது ஆசிரியர்கள் புகார்

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதி ஊராட்சிப் பள்ளிகளில் கழிப்பிடங்கள் கட்டும் பணி நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. சில பள்ளிகளில் பணிகள் முடிவடையாதபோதும், முடிந்துவிட்டதுபோல சான்றளிக்குமாறு ஆசிரியர்களை, அதிகாரிகள் வற்புறுத்துவதாக புகார் கூறப்படுகிறது.

கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கிராமப்புறங்களில் செயல்படும் அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் தலா ரூ.1.10 லட்சம் செலவில் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பிடங்கள் கட்டும் இத் திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்களில் இருந்தும் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடங்கி பல மாதங்கள் ஆகி, இத் திட்டம் நிறைவு பெறும் நிலையை எட்டியுள்ளது.

ஆனால், பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல பள்ளிகளில் பாதியளவு பணிகள் கூட முடியாத நிலை காணப்படுகிறது. இந் நிலையில், திட்டத்தை நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால் வேக வேகமாக கழிப்பிடங்கள் கட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

பணிகள் முழுமையாக முடியாத பள்ளிகளில், பணிகள் முடிந்து விட்டதாக சான்று கொடுக்குமாறு அதிகாரிகள் வற்புறுத்துவதாக ஆசிரியர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

பொள்ளாச்சியை ஒட்டியுள்ள பல பள்ளிகளில் கழிப்பிடம் கட்டும் பணிகள் முழுமை பெறவில்லை. இருப்பினும் பணிகள் முடிந்துவிட்டதுபோல சான்று அளிக்குமாறு ஆசிரியர்களை அதிகாரிகள் சிலர் வற்புறுத்துவதாகவும், பணிகள் முடியாதபோதும், பல பள்ளிகள் சான்று வழங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பணிகளில் தரம் குறைவு

ஏராளமான பள்ளிகளில் கழிப்பிடம் கட்டும் பணிகள் முறையாக நடைபெறவில்லை. திட்டத்தை இறுதி செய்யும் நேரத்தில் பணிகள் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளன. இதில் பயன்படுத்தப்படும் மணலில் கிரஷர் மண் கலக்கப்படுவதாக ஏற்கெனவே புகார் எழுந்தது. இதனிடையே வேகமாக பணிகள் முடிக்கப்படுவதால், கட்டிடங்களின் தரம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து கல்வி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'இந்த பணிகள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கண்காணிப்பில் நடக்க வேண்டும், இல்லாவிட்டால் பள்ளி ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

தனியார் ஒப்பந்ததாரர்கள் போக்கில் விட்டதால்தான் ஒரு சிறிய கழிப்பறை கட்ட 8 மாதங்கள் ஆகியுள்ளன. இதில், முடியாத பணியை முடிந்தது போல சான்றளிக்க வேண்டுமென வற்புறுத்துவதாகவும் தகவல் வந்தது. இது முற்றிலும் தவறு. குழந்தைகளுக்கு பாதுகாப்பான கழிப்பிடம் தேவை. எனவே கட்டுமானத்தை முழுமையாக முடித்துவிட்டு, அதற்குப் பிறகு சான்று கேட்பதே சரியாக இருக்கும்' என்றார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் / திட்ட இயக்குநர் த.முருகன் கூறும்போது, 'பள்ளிகளில் கழிப்பிடம் கட்டும் திட்டம் இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது. ஒரு சில பள்ளிகளில் கழிப்பிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே விரைவில் அனைத்துப் பள்ளிகளிலும் பணிகள் முடிய உள்ளது. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், பணி முடியும் முன்னரே, பணி முடிந்ததாக சான்றளிக்க வேண்டுமென நிர்பந்தித்தால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிடம் புகார் தெரிவிக்கலாம்; உடனடியாக நட வடிக்கை எடுக்கப்படும். ஆனால், இதுபோன்ற புகார்கள் இதுவரை ஏதும் வரவில்லை' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x