

ரயில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னையில் செவ் வாய்க்கிழமை நடந்த விசா ரணையின்போது ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், போலீஸ் காரர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு கடந்த 1-ம் தேதி காலை வந்த குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் ஸ்வாதி என்ற இளம்பெண் பலியானார். 14 பேர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப் பேற்கவில்லை. குண்டுவெடிப்பு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள தமிழக சிபிசிஐடி போலீசாரும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருவதாக அவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அலு வலகத்தின் 5-வது மாடியில் உள்ள கூட்டஅரங்கில் 6-ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பூர்வ விசாரணை தொடங்கும் என்றும் பொதுமக்கள் நேரில் ஆஜராகியோ அல்லது எழுத்துபூர்வமாகவோ சான்று அளிக்கலாம் என்றும் நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, தெற்கு ரயில்வே ஆணையர் எஸ்.கே.மிட்டல் தலைமையில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடந்தது. குண்டு வெடிப்பு நடந்த பெங்களூர் குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பணிபுரிந்த இன்ஜின் டிரைவர், டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினர், இருப்புப் பாதை காவல்நிலைய போலீஸ்காரர்கள் மற்றும் அந்த வழியில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி வாக்கு மூலம் அளித்தனர்.
அவர்களிடம் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணை குறித்து நிருபர் களிடம் மிட்டல் கூறுகையில், ‘‘குண்டு வெடிப்பு நடந்த அன்று பெங்களூர் குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பெங்களூரில் இருந்து தாமதமாகத்தான் புறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான முதல்கட்ட விசாரணை அறிக்கை ஒரு மாதத்தில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும்.
மத்திய அரசு உத்தரவிட்டால், சட்டப்பூர்வ விசாரணை குறித்த தகவல்கள் தமிழக சிபிசிஐடி போலீசாரிடம் பகிர்ந்து கொள்ளப்படும்” என்றார்.