

தமிழகத்தில் சமூக நலத் துறை சார்பில் காது கேளாதோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகள் விடுதி வசதி யுடன் தொடங்கப்பட்டன. இந்தப் பள்ளிகள் தற்போது மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் உள்ளன.
காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில் 1975-ல் தொடங்கப்பட்ட அரசு காது கேளாதோர் பள்ளி, கடந்த 2004-ல் சதாவரம் பகுதிக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. இங்கு தற்போது முன்பருவ வகுப்பு முதல் 10-ம்வகுப்பு வரை, 66 மாணவ- மாண விகள் படித்து வருகின்றனர். இதில், 52 பேர் விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். இவர்கள் 10-ம் வகுப்பு முடித்த பிறகு இந்த மாணவர்கள் மேல் நிலைக் கல்வியைத் தொடர வேண்டுமெனில், தஞ்சாவூருக்கோ அல்லது தருமபுரிக்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. அல்லது, ராமாபுரம் எம்ஜிஆர் காது கேளாதோர் சிறப்புப் பள்ளி மற்றும் சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தனியார் காது கேளாதோர் சிறப்புப் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக இங்கு 10-ம் வகுப்பு முடிக்கும் பெரும்பாலான மாணவர்கள் மேல்நிலை கல்வியைத் தொடர முடியாத நிலை உள்ளது.
எனவே, காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளாகச் செயல்படும் மாற்றுத்திறனாளிகள் உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று காது கேளாதோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் கூறும் போது, ‘பள்ளியை தரம் உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் விசாரித்து நட வடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.