

தமிழக முதல்வர் ஜூன் 22-ம்தேதி பிரச்சாரத்திற்கு ஆர்,கே நகர் தொகுதிக்கு வந்தார். அந்த செலவு வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படுமா? என்பதை தேர்தல் ஆணையம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி.மகேந்திரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வாக்குரிமை ஜனநாயகத்தில் வாக்காளர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டிய ஜனநாயக பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது தேர்தல் ஆணையம். இந்த இடைத் தேர்தலில் இரண்டு கேள்விகளை தேர்தல் ஆணையத்தின் முன் வைக்கிறேன்.
இந்தியாவின் அரசியல் சட்டம், முழு அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியிருக்கிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பகுதி 15 பிரிவு 324 விதியை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இதன்படி, தேர்தலுக்கான முழு கண்காணிப்பு, வழிகாட்டுதல், தேர்தல் செயல்பாடுகளை கட்டுப்பட்டுதல் ஆகிய அனைத்து அதிகாரங்களும் ஆணையத்திடம் தான் அரசியல் அமைப்பு சட்டப்படி குவிக்கப்படுள்ளது. இந்த அதிகாரங்களை செயல்படுத்த ஆணையம், அரசு இயந்திரத்தின் எல்லாத் துறைகளையும் ஆணைப் பிறப்பித்து செயல்படுத்த முடியும்.
இன்றைய தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தமிழக அரசின் வேளாண் துறையின் முதன்மை செயலாளராகப் பணியாற்றியவர். திருவரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் போது, பொறுப்பேற்பை ஏற்றுக் கொண்டவர். இதற்கு முன்னர் மிகவும் நேர்மையானவர்கள் பலர் தேர்தல் ஆணையாளராகப் பணியாற்றியுள்ளார்கள்.
சக்சேனா தலைமையில் இயங்கும் தேர்தல் ஆணையம் தனது தலையாய பொறுப்புகளை எல்லாம் முற்றாக புறக்கணித்து விட்டு, தன்னை குறைகளை கேட்டறியும் அமைப்பாக காட்டிக் கொள்கிறது. தேர்தல் ஆணையம் என்பது காவல் நிலையம் அல்ல. புகார் தந்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பேன் என்பதற்கு. தானே எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்தி தவறுகளை கண்டறிந்து தானாகவே, நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைப்பு, இதை ஏன் ஆணையம் புறக்கணிக்கிறது?
ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்றுள்ள அத்துமீறல்கள் என்பது வெளிப்படையானது. இவை ஆதாரத்தோடு அச்சு, காட்சி ஊடகங்களின் மூலம் மிகப்பெரிய அளவில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலை நான் இங்கு மீண்டும் வெளியிட விரும்பவில்லை.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் செலவை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பில் யார் தொகுதிக்குள் செயல்பட்டாலும் அவர்களின் செலவும் வேட்பாளர் கணக்கில் வர வேண்டும். இதைத் தவிர, வேட்பாளர் சார்பில் கொடுக்கப்படும் கணக்கு சரியானது தானா என்பதை கண்டறிய தேர்தல் ஆணையத்தின் தலைமையில் தனித்துறையே செயல்படுகிறது. இவர்கள் கேமராக்ளுடன் தொகுதி முழுவதும் சுற்றி வருகிறார்கள்.
இதன்படி, தேர்தலில் வேட்பாளர்களின் கணக்கு ஜூன் 20 தேதி வரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரின் 3 லட்சத்து 63 ஆயிரத்து 57 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வின் வேட்பாளர் தமிழக முதல்வரின் செலவு 7 லட்சத்து 40 ஆயிரம் தேர்தல் அதிகாரியாரல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி காட்டும் கணக்கு நேர்மையானது தானா?
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் அதிகாரம் படைத்த அனைவரும் பெரும் எண்ணிகையில், தெருவுக்கு குறைந்தது இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்து, ஆயிரக்கணக்கான கார்களுடன் வந்து தங்கியிருந்த ஆளும் கட்சியினர் தங்கள் கேமராக் கண்களுக்கு பிடிபடவில்லையா?
இதைப் போலவே மற்றொரு கேள்வி. மக்கள் பிரதிநிதி சட்டபிரிவு 77/1 விதிபடி வேட்பாளர் செலவு குறித்த, தேர்தல் ஆணையத்தின் பதில் மனு ஒன்றை நீதி மன்றத்தில் தாக்கல் செய்து இருக்கிறீர்கள்? இதன்படி, நட்சத்திரப் பேச்சாளரால் நடத்தப்படும் பேரணி, பொதுக் கூட்டத்தில் வேட்பாளர் அல்லது அவரது முகவர் கலந்து கொண்டால், அந்த பேரணி மற்றும் பொதுக் கூட்டத்திற்கான மொத்த செலவும், வேட்பாளர் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என்று கூறியுள்ளீர்கள்.
இது உண்மை எனில், தமிழக முதல்வர் ஜூன் 22-ம்தேதி பிரச்சாரத்திற்கு ஆர்,கே நகர் தொகுதிக்கு வந்தார். அந்த செலவு வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படுமா? என்பதை தேர்தல் ஆணையம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்திடம் நியாயமான பதிலை எதிர்பார்க்கிறேன்'' என்று சி.மகேந்திரன் கூறியுள்ளார்.