

கொடைக்கானலில் மூடப்பட்ட இந்துஸ்தான் யூனிலீவர் மெர்குரி தெர்மோ மீட்டர் தொழிற்சாலையில் இருந்து நச்சுத் தன்மை வாய்ந்த பாதரசம் வெளியேறி அத்தொழிற் சாலையை சுற்றியுள்ள காட்டில் கசிவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
அக்குழுவின் ஆலோசகர் நித்தியானந்த் ஜெயராமன் சென்னை யில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொடைக்கானலில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் ஆலை கடந்த 1983-ல் தொடங்கப்பட்டது. இங்கிருந்து நச்சுத்தன்மை கொண்ட பாதரசம் வெளியேறியதை அடுத்து தொழிற்சாலை கடந்த 2001-ல் மூடப்பட்டது. பாதரச நச்சால் மூளை நரம்புகள் பாதிப்பு, மறதி, சிறுநீரகக் கோளாறு, பிறவிக் கோளாறு ஏற்படும்.
இத்தொழிற்சாலையில் இருந்து 1.3 டன் பாதரசத்தை பாம்பாறு வழியாக வனப் பகுதியில் வெளியேற்றி இருப்பதாகவும், தொழிற்சாலைக்குள்ளேயே 366 கிலோ பாதரசம் மண்ணோடு கலந்திருப்பதாகவும் தொழிற்சாலை நிர்வாகமே ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த பாதரசம் மழைக் காலங்களில் பாம்பாறு வழியாக வைகை ஆற்றில் கலந்து அதில் இருக்கும் மீன்களில் பரவி, அதை உண்போருக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எங்கள் குழு சார்பில் கொடைக்கானலில் பாசி மாதிரி எடுக்கப்பட்டு ஹைதராபாத் அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் சோதித்ததில் அளவுக்கதிகமாக பாதரசம் இருப்பது தெரியவந்துள்ளது. இது அங்கு ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பையே காட்டுகிறது.
எனவே அப்பகுதியை முழுமை யாக தூய்மைப்படுத்த வேண்டும். அப்பகுதியைச் சுற்றிலும் வசிக்கும் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும். இவை அனைத்தையும் பொது மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்களிப்போடு மேற்கொள்ள வேண்டும். இத்தொழிற்சாலையில் வேலை செய்து, உடல் நலக்குறைவுக்கு உள்ளான தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை யிடம் பலமுறை தெரிவித்தும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. எனவே இதன் அபாயத்தை மக்களுக்கு தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். வன உயிரின ஆவணப்பட தயாரிப்பாளர் சேகர் தத்தாத்ரி, சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் பலமுறை தெரிவித்தும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. எனவே இதன் அபாயத்தை மக்களுக்கு தெரிவிக்கிறோம்.