

தமிழகத்தில் முதல் முறையாக பெரியார் பல்கலைக்கழகத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.50 கோடி திட்ட மதிப்பீட்டில் 5 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சோலார் பிளான்ட் அமைக்க, மத்திய, மாநில அரசின் ஒப்புதலுக்காக திட்ட வரைவு அனுப்பப்பட்டுள்ளதாக பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வரும் 2020-ம் ஆண்டுக்குள் மரபுசார் எரிசக்தி மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சோலார் பார்க் திட்டத்தை வரையறுத்து, அமல்படுத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தில் முதல் முறையாக ரூ.50 கோடி திட்ட மதிப்பீட்டில், 5 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சோலார் பிளான்ட் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிவியல் துறை டீன் வி.கிருஷ்ணகுமார் கூறியதாவது:
இந்தியாவில் வரும் ஐந்து ஆண்டுகளில் மரபுசார் எரிசக்தியில் மிகப்பெரிய புரட்சி ஏற்படவுள்ளது. எங்கும் எதிலும் சோலார் மயமாக மாறி வருகிறது. சோடியம் வேப்பர், மெர்குரி பல்புகளுக்கு விரைவில் தடை விதித்து, பை-பாஸ் சாலைகளில் சோலார் மின் விளக்கு பொருத்தப்படவுள்ளது. தற்போது, சிக்னல் பாயின்ட்டுகளிலும், ரயில், பஸ்களிலும் சோலார் தகடுகள் அமைத்து, அதற்கான மின் உற்பத்தியை தயாரிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
எதிர்கால மின் தேவை மற்றும் பற்றாக்குறையை சமாளிக்க மரபுசார் எரிசக்தி மட்டுமே தீர்வாக இருக்கும். எனவே, இதற்கான கல்வி முறைக்கு கல்வி நிறுவனங்கள் அதீத முக்கியத்தும் அளித்து வருகிறது. தற்போது, மரபுசார் எரிசக்தி சம்பந்தமாக பயிலும் மாணவர்கள் 100 சதவிகித வேலைவாய்புடன் கல்வியை பயின்று வருகின்றனர். நேரடி கல்வி முறையை மாணவர்கள் கற்றிட சோலார் பிளான்ட் பெரியார் பல்கலைக்கழத்தில் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது, என்றார்.
இதுகுறித்து பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் சி.சுவாமிநாதன் கூறியதாவது:
இன்றைய காலக்கட்டத்துக்கு தகுந்த படிப்புகளை தேர்வு செய்வதிலேயே மாணவர்களும், பெற்றோரும் ஆர்வம் காட்டுகின்றனர். எதிர்கால தேவை மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கல்வி முறைக்கு மாணவ, மாணவியர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மரபுசார் எரிசக்தி ஆற்றல் சம்பந்தமான முதுகலை பட்டப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது. இதற்காக முன்னணி சோலார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, அதில் பணியாற்றக் கூடிய திறமை மிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, பெரியார் பல்கலைக்கழகத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் மத்திய அரசிடம் ரூ. 40 கோடி, மாநில அரசிடம் ரூ.10 கோடி என மொத்தம் ரூ.50 கோடி திட்ட மதிப்பீட்டில் 5 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சோலார் பிளான்ட் அமைக்க மத்திய, மாநில அரசின் ஒப்புதலுக்காக திட்ட வரைவு அனுப்பியுள்ளோம். இதன் மூலம் தினமும் 5 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி செய்யப்படும். ஆயிரம் யூனிட் பல்கலைக்கழக மின் உற்பத்தியை பூர்த்தி செய்தாலும், மீதி மாநில அரசுக்கு மின்சாரம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.