குப்பை உணவுகளை தவிர்த்து இயற்கை உணவுகளை உட்கொள்ளுங்கள்: மருத்துவர் கு.சிவராமன் அறிவுரை

குப்பை உணவுகளை தவிர்த்து இயற்கை உணவுகளை உட்கொள்ளுங்கள்: மருத்துவர் கு.சிவராமன் அறிவுரை
Updated on
2 min read

நோய்களைத் தவிர்க்க குப்பை உணவுகளை ஒதுக்கிவிட்டு, இயற்கை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றார் சித்த மருத்துவர் கு.சிவராமன்.

திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ‘கனவு மெய்ப்பட’ நிகழ்ச்சியில் ‘நஞ்சா-அமுதா-நம் உணவு’ என்ற தலைப்பில் அவர் பேசியது:

கடந்த சில ஆண்டுகளாக 9, 10 வயதுக் குழந்தைகள்கூட புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

வசதியானவர்களுக்கு நோய்கள் வந்தால், அவர்கள் வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். ஆனால், வசதியில்லாதவர்களின் கதி என்ன?

சிறு வயதிலேயே கொடிய நோய்களால் பாதிக்கப்படுவதற்கு, தற்போதைய நமது உணவுக் கலாச்சாரமே முக்கியக் காரணம். உள்ளூர் உணவுகளை புறந்தள்ளிவிட்டு, அயல்நாட்டு உணவுகளை ருசிக்காக சாப்பிடப் பழகிவிட்டோம். பரோட்டா நம் நாட்டின் தேசிய உணவுபோல மாறிவிட்டது. மைதா மாவு தயாரிக்கப்படும் முறையை அறிந்தால், யாரும் பரோட்டா சாப்பிட மாட்டார்கள். கோதுமையை 8 மணி நேரம் குளோரின் கலந்த நீரில் ஊறவைத்து, அதை வெள்ளை மாவாக மாற்ற பல்வேறு ரசாயனங்களையும் சேர்த்துதான் மைதா தயாரிக்கப்படுகிறது. இந்த ரசாயனங்கள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை.

தற்போதெல்லாம் பெண் குழந்தைகள் 8, 9 வயதிலேயே பூப்படைந்து விடுகின்றனர். இதனால் அவர்கள் அடையும் துன்பங்கள் ஏராளம்.

ஓட்ஸ் குதிரைக்கான உணவு. அதை எல்லோரும் இப்போது சாப்பிடப் பழகி விட்டோம். இவைதான் அனைத்து நோய்களுக்கும் காரணம். இதுகுறித்த விழிப்புணர்வை பரப்புவது மிகவும் அவசியம்.

எனவே, குப்பை உணவுகளைத் தவிர்த்து விட்டு, நமது பாரம்பரிய உணவுகளான கடலை மிட்டாய், கம்பு, கேழ்வரகு, பழங்கள், கொட்டையுள்ள திராட்சை, இட்லி ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த சோகை உள்ளிட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க, கம்பு சாப்பிடலாம். இதில் மற்ற உணவுப் பொருட்களைக் காட்டிலும் 8 மடங்கு அதிகமாக இரும்பு சத்து உள்ளது. இது, கர்ப்பப் பையில் நீர்க்கட்டி உள்ளிட்டவை ஏற்படாமல். தாய்ப் பாலுக்கு அடுத்தபடியாக கேழ்வரகு கூழ் மிகவும் சிறந்த உணவு. பொட்டலங்களில் அடைக்கப்பட்ட அயல்நாட்டு குப்பை உணவுகளைத் தவிர்த்து விட்டு, நமது பாரம்பரிய உணவுப் பழக்கத்துக்கு மாறினாலே நோய்கள் வராமல் தவிர்க்கலாம் என்றார்.

இந்த விழாவுக்கு, பள்ளித் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) ரேவதி, பள்ளி பொருளாளர் செல்வராஜ், இணைச் செயலாளர் சத்தியமூர்த்தி, முதல்வர் துளசிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறார் சித்த மருத்துவர் கு. சிவராமன்.

நூடுல்ஸ் பரவியது எப்படி

உலகம் முழுவதும் பல்வேறு உணவுப் பழக்க வழக்கங்களைக் கொண்ட மக்கள் அனைவருக்குமே பிடித்தமான உணவாக நூடுல்ஸ் உருவானதற்குக் காரணம், அனைவரது மூளையிலும் பதிவான தாய்ப்பாலின் சுவையோடு ஒத்த ரசாயனத்தை நூடுல்ஸில் கலந்து விற்பனை செய்ததே என்றார் கு. சிவராமன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in