

அம்பேத்கரின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாமல் அவரை மட்டும் கொண்டாடி என்ன பயன்? என்று முன்னாள் நீதிபதி கே.சந்துரு கேள்வி எழுப்பியுள்ளார்.
அக்கறையுள்ள குடிமக்கள் சங்கத்தின் சார்பில் ‘ஒடுக்கப்பட்டோர் எழுச்சிக்கான வழிகள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மண்டல் ஆணைய உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய அரசு செயலாளர் பி.எஸ்.கிருஷ்ணன் கூறும்போது, ‘‘தாழ்த்தப்பட்டோரின் நிலை பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது மாறியிருக்கிறது. தலித் மக்கள் இல்லாத அரசு அலுவலகத்தை இன்று காண முடியாது. ஆனால், அடிப்படையான மாற்றங்கள் நடைபெறவில்லை. அதனால்தான் இன்னமும் அவர்கள் மனிதக் கழிவுகளை அகற்றுகின்றனர்.
இப்போதும் தலித் பெண்ணின் நிழல் படுவதுகூட குற்றமாக கருதப்படுகிறது. திருநெல்வேலியில் 2 மாணவிகள் கழிப்பறையை கழுவ பள்ளி நிர்வாகமே உத்தரவிட்டுள்ளது. உண்மையிலேயே தாழ்த்தப்பட்டோருக்கு மத்திய அரசு உதவ நினைத்தால், மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களுக்கு ரயில்வே கேண்டீனில் ஏன் வேலை வழங்கக் கூடாது’’ என்றார்.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு பேசும்போது, ‘‘உத்தரப் பிரதேசத்திலும், பிஹாரிலும் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதற்காக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல பாஜக அரசு காட்டிக் கொள்கிறது. அம்பேத்கரின் கருத்துகளை ஏற்றுக் கொள்ளாமல், அம்பேத்கரை மட்டும் கொண்டாடி என்ன பயன்? ஐஐடியில் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் அங்கீகாரம் திரும்ப பெறப்பட்டது மிகச் சிறிய வெற்றி. இன்னும் பல தளங்களில் போராட வேண்டியுள்ளது’’ என்றார்.
முன்னாள் எம்எல்ஏவும் வழக்கறிஞ ருமான பதர் சயீத் பேசும்போது, ‘‘நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அரசியலமைப்புச் சட்டம்தான் தனது மதம் என்று பிரதமர் கூறினார். ஆனால், அவர் கூறுவதற்கும் நடைமுறையில் நடப்பதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன'' என்றார். முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி, எழுத்தாளர் ஞாநி உள்ளிட்ட பலர் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டனர்.