

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி ஜி.சம்பத்குமா ரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் மகேந்திர சிங் ரங்கா. இவர், அப்போது சென்னை க்யூ பிராஞ்ச் எஸ்.பி. ஆக இருந்த ஜி.சம்பத்குமாரை தொடர்புகொண்டு, கிரிக்கெட் சூதாட்டத்தில் புரோக்கர்களாக செயல்பட்டவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றுவதற்கு ரூ.60 லட்சம் தருவதாக உறுதி அளித்தார். கடந்த 2013-ம் ஆண்டு மே 22, 23 தேதிகளில் தனது நண்பர்கள் மூலம் சில தவணைகளாக ரூ.30 லட்சத்தை சம்பத்குமார் பெற்றார்.
டிஜிபி அலுவலக வளாகத் தில் உள்ள க்யூ பிராஞ்ச் அலுவல கத்துக்கே சென்று சம்பத்குமாரிடம் ரூ.30 லட்சத்தை மகேந்திர சிங் ரங்கா கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
விசாரணை முடிந்து சைதாப் பேட்டை 9-வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, சம்பத்குமார் தலைமறைவானார்.
இந்நிலையில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன் றத்தில் சம்பத்குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆர்.சுப்பையா பிறப்பித்த உத்தரவு:
இவ்வழக்கில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்டை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் பிறப்பித்துள்ளார். அதையடுத்து மனுதாரர் தலைமறைவாக உள்ளார். அதனால் அவர் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். எனவே, முன்ஜாமீன் கோருவதற்கு அவருக்கு தகுதியில்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி சுப்பையா உத்தரவிட்டார்.