

இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலைத் தவிர்க்க கடல் விவசாயத்தை (கடலில் கூண்டுகள் அமைத்து மீன்கள் வளர்க்கும்) மாற்றுத் தொழிலாக்கி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மீன் பிடிப்பதற்கும், கடல்சார் தொழிலுக்கும் பெயர் பெற்றது. மேலும் மீன் உற்பத்தியில் தமிழக அளவில் முதலிடத்திலும் உள்ளது. இங்கு மன்னார் வளைகுடா, பாக். ஜலசந்தி கடற்பகுதியில் பிடிக்கப்படும் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட மீன்கள் பதப்படுத்தப்பட்டு சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், சீனா ஆகிய ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், ராமநாதபுரம் அருகே மரைக்காயர்பட்டினத்தில் உள்ள மத்திய அரசின் கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் மீனவர்களின் பங்களிப்புடன் கடலில் கூண்டுகள் அமைத்து அதில் புரதச்சத்துமிக்க கொடுவா, பாறை, கோபியா போன்ற வருமானம் தரக்கூடிய மீன்களை வளர்க்கும் கடல் விவசாய முறையை அறிமுகப்படுத்தியது.
தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், மண்டபம், மரைக்காயர்பட்டினம், முனைக்காடு, ஓலைக்குடா ஆகிய கடற் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்லாமல், கடற்கரையில் இருந்து குறைந்த தூரத்தில் மீன் பண்ணைகள் அமைத்து நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர்.
இது குறித்து மரைக்காயர்பட்டினம் கடலில் கூண்டுகள் அமைத்து கடல் விவசாயம் செய்யும் தங்க மரைக்காயர் கூறியதாவது:
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மண்டபத்தில் இருந்து விசைப்படகில் சென்று மீன்பிடித்து வந்தேன். ஆனால், இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலால் தொழில் செய்ய முடியாமல் சில ஆண்டுகள் துபை சென்று ஒப்பந்தப் பணியாளராகப் பணிபுரிந்தேன்.
தாயகம் திரும்பியதும் கடலில் மீண்டும் தொழில் செய்ய முடியுமா? என்ற அச்சத்துடன் இருந்த தருணத்தில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் கடலுக்குள் மீன் வளர்ப்பு பண்ணை அமைக்க பயிற்சி அளித்தனர்.
கடற்கரையில் இருந்து குறைந்தபட்சம் 500 மீட்டரில் இருந்து அதிகபட்சம் 3 கி.மீ. வரை கடலில் மீன் பண்ணைகளுக்கான கூண்டுகள் அமைக்கலாம்.
இதற்காக 9 மீட்டர் சுற்றளவு கொண்ட மிதவை கூண்டை இரும்பு மற்றும் பாலி எத்திலினைக் கொண்டு அமைக்க வேண்டும். அதன் நடுவில் குறைந்தபட்சம் 8 மீட்டரில் இருந்து கடலுக்குள் மூழ்கிய நிலையில் வலையை அமைக்க வேண்டும். ஒரு கூண்டு அமைக்க ரூ.30,000 வரை செலவு பிடிக்கும்.
ஒரு கூண்டுக்குள் 15 கிராம் எடை கொண்ட அதிகபட்சமாக 600 கொடுவா, பாறை, கோபியா மீன் குஞ்சுகளை விடலாம். மீன் குஞ்சுகளுக்கு உணவாகப் புழுக்கள், பாசிகள், சிறிய ரக மீன்களை கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு மீன் குஞ்சும் ஆறு மாதங்களில் 2 முதல் 3 கிலோ வரை எடை கொண்டதாக வளரும். ஒரு கிலோ மீன் அதிகபட்சம் ரூ.250 வரை விலைபோகும். ஆறே மாதத்தில் செலவுகள்போக ஒரு கூண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என்றார்.