

புறநகர் ரயில் டிக்கெட்களை மொபைல் போன் மூலம் பெறும் வசதி, அனைத்து புறநகர் ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்களை மொபைல் போன் மூலம் பெறுவதற்கான வசதி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சாப்ட்வேரை ஆண்ட்ராய்டு, விண்டோஸ் போன்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதற்காக, ‘ஆர்-வேலட்’ என்ற கணக்கு தொடங்கப்படும். தற்போது, சென்னை கடற்கரை, எழும்பூர், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய ஐந்து ரயில் நிலையங்களில் இருந்து பயணத்தைத் தொடங்குபவர்கள் மட்டுமே இந்த சேவையின் மூலம் டிக்கெட்களை பெற முடியும்.
இந்நிலையில், இச்சேவை புறநகர் ரயில் நிலையங்கள் அனைத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை-திருவள்ளூர், சென்னை கடற்கரை-வேளச்சேரி மற்றும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு ஆகிய புறநகர் வழித் தடங்களில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் இருந்து பயணத்தைத் தொடங்கு பவர்கள் இச்சேவையின் மூலம் டிக்கெட்களை பெற முடியும்.
பயணிகள் தங்களுக்குத் தேவையான டிக்கெட்களை ‘ஆர்-வேலட்’ என்ற கணக்கின் மூலம் முதலில் பதிவு செய்ய வேண்டும். பின்னர், மேற்கண்ட ரயில் நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் தாங்கள் பதிவு செய்த டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அவற்றை பயணத்தின் போது உடன் கொண்டு செல்ல வேண்டும்.
இதுகுறித்த கூடுதல் தகவல்களை www.utsonmobile.indianrail.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.