

மத்திய, மாநில அரசுகளிடையே உறவுகள் மேம்படும் வகையில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் போட்டியிடுகிறார். இந்த தேர்தலை திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. எனவே, தேசிய ஜனநாயக கூட்டணியும் இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருக்கும்போது, ஜெயலலிதா முதல்வராக இருந்தால் மட்டுமே அது வலிமையான ஆட்சியாக இருக்கும். உடனுக்குடன் முடிவுகளை எடுக்கும் ஆட்சியைத்தான் மக்கள் விரும்புகின்றனர். மத்திய, மாநில அரசுகளிடையே ஓரளவுக்கு உறவுகள் மேம்பட்டு இருக்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் உறவை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என நினைக்கிறோம்.
தமிழக அரசுடன் ஏற்பட்டுள்ள நட்புறவை வைத்து, மத்திய அரசிடம் இருந்து பல்வேறு திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்து செயல்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி முயற்சிக்க வேண்டும். இதுதான் தற்போதைய தேவையாகும். இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து வரவுள்ள சட்டப் பேரவைத் பொதுத் தேர்தலில் போட்டியிட நாம் தயாராக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.