

கடலில் காணாமல் போன காசிமேடு மீனவர்கள் ஐந்து பேர் ஏழு நாட்களுக்குப் பிறகு நேற்று வீடு திரும்பினர். அவர்களை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் வரவேற்றார்.
சென்னை அடுத்த காசிமேடு ஜி.எம்.பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் கடும்பாடி, மாயாண்டி, சுரேஷ், சக்திவேல், மணி ஆகிய 5 பேர் கடந்த 22 ம் தேதி படகில் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது திடீரென காணாமல் போயினர். அவர்களை கடலோர காவல் படையினர் கப்பல் மற்றும் சிறிய விமானம் மூலம் தேடி வந்தனர். மீனவர்களும் விசைப் படகுகளில் சென்று தீவிரமாக தேடி வந்தனர். ஆனால், ஒரு வாரமாகியும் அவர்களைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கடந்த 28 ம் தேதி ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினம் கடற்கரை கிராமத்தில் சக்திவேலும், மணியும் கடலில் நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் அப்பகுதி மீனவர்கள் விரைந்து சென்று நடுக்கடலில் தத்தளித்த கடும்பாடி, மாயாண்டி, சுரேஷ் ஆகியோரை மீட்டு வந்தனர்.
பலத்த காயம் அடைந்திருந்த அவர்கள் 5 பேரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். இதற்கிடையே, மீனவர் கள் மீட்கப்பட்டது குறித்து காசி மேட்டில் உள்ள அவர்களது உற வினர்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து மகிழ்ச்சி அடைந்த அவர்கள் ஆந்திராவில் இருந்த ஐந்து பேரையும் அழைத்து வர சென்றனர். மீன்வளத்துறை துணை இயக்குநர் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
நேற்று அதிகாலை 4 மணி அளவில் மீனவர்கள் ஐந்து பேரும் கார் மூலம் காசி மேட்டுக்கு வந்தனர். அவர்களை குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீர் மல்க வரவேற்றனர். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் ஐந்து மீனவர்களுக்கும் சால்வை அணிவித்து வரவேற்றார்.
கடலில் சிக்கிய அனுபவம் குறித்து மீனவர்கள் கூறுகையில், கடந்த 22 ம் தேதி இரவு 10 மணி அளவில் கரைக்கு திரும்ப தயாரானபோது ராட்சத அலை திடீரென தாக்கியதில் படகு கவிழ்ந்தது. நாங்கள் அனைவரும் படகை பிடித்துக் கொண்டு தத்தளித்தோம்.
இரவு முழுவதும் தத்தளித்த நாங்கள் மறுநாள் காலையில் மீனவர்கள் மீட்க வருவார்கள் என்று நினைத்தோம். ஆனால் யாரும் வரவில்லை. உடல் சோர்வாலும், தண்ணீரில் இருந்ததாலும் மிகவும் பலவீனம் அடைந்தோம். இதையடுத்து, சக்திவேல் கரைக்கு நீந்தி சென்றார். மசூலிப்பட்டினம் மீனவர்கள் முதலில் எங்களுக்கு உதவி செய்ய மறுத்தனர். பின்னர் அவர்களிடம் கெஞ்சிக் கேட்டதையடுத்து அவர்கள் எங்களுக்கு உதவினர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.