Published : 18 Jun 2015 08:54 PM
Last Updated : 18 Jun 2015 08:54 PM

290 புதிய பேருந்துகள், 55 சிற்றுந்துகள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

போக்குவரத்துக் கழகங்களுக்கு வாங்கப்பட்ட 290 புதிய பேருந்துகள் மற்றும் 55 சிற்றுந்துகளை முதல்வர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சார்பில் திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரத்தில் ரூ.99.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்து பணிமனை மற்றும் துறையூரில் ரூ.94.45 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மோட்டார் வாகன பகுதி அலுவலகம் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று திறந்துவைத்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் கட்டப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம், நெல்லை அம்பாசமுத்திரத்தில் மோட்டார் வாகன பகுதி அலுவலகம், கரூர் மாவட்டம் மண்மங்கலம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆகிய இடங்களில் மோட்டார் வாகன பகுதி அலுவலகங்கள், அரியலூர் வட்டார போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வு தளம், கோவை கோபாலபுரத்தில் போக்குவரத்து சோதனைச் சாவடி, சிதம்பரம், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் தரம் உயர்த்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் ஆகியவற்றையும் முதல்வர் திறந்துவைத்தார்.

மேலும் திருநெல்வேலி, சேரன்மாதேவி, திண்டுக்கல், காரைக்குடி, திருபுவனம், சேத்துப்பட்டு, ஓமலூர், கோவை ஒண்டிப்புதூர், கந்தர்வக்கோட்டை, திருவையாறு, குளித்தலை, குமுளி (லோயர் கேம்ப்), மதுரை செக்கானூரணி ஆகிய இடங்களில் கட்டப்பட்ட 13 பணிமனைகள் என மொத்தம் ரூ.19 கோடியே 53 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்துத்துறை கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்துவைத்தார்.

புதிய பேருந்துகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ரூ.87 கோடியே 24 லட்சத்து 21 ஆயிரம் செலவில் புதிதாக வாங்கப்பட்ட 290 பேருந்துகள் மற்றும் 55 சிற்றுந்துகளை முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், விழுப்புரம் கோட்டம் சார்பில் - 52, சேலம் - 41, கோவை - 29, கும்பகோணம் - 47, மதுரை - 104, திருநெல்வேலி - 17 என மொத்தம் 290 புதிய பேருந்துகளும் விழுப்புரம் கோட்டம் சார்பில் -7, கோவை கோட்டம் சார்பில் – 44, கும்பகோணம் கோட்டம் சார்பில் - 4 என மொத்தம் 55 சிற்றுந்துகளும் இயக்கி வைக்கப்பட்டன.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x