

செம்மரக் கடத்தல் வழக்கில் கைதான டிஎஸ்பி தங்கவேலுவின் டைரி போலீஸாரிடம் சிக்கியுள்ளது. அதில் உள்ள செம்மரக் கடத்தல் குறிப்புகள் குறித்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
ஆம்பூர் அடுத்த பாலூரைச் சேர்ந்தவர் சின்னபையன். செம்மரக் கடத்தல் தொழிலில் ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்டார். இவர் பதுக்கி வைத்திருந்த 7 டன் செம்மரத்தை வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேலு போலீஸாருடன் சென்று கடத்திச் சென்றார். இது தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த டிஎஸ்பி தங்கவேலு புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிஎஸ்பி தங்கவேலுவை போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க ஆம்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுகுறித்து, காவல் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:
டிஎஸ்பி தங்கவேலுவிடம் இருந்து 2014-ம் ஆண்டுக்கான டைரி ஒன்றை பறிமுதல் செய்துள்ளோம். இதில், செம்மரங்களின் எடை, அருகில் அதற்கான விலையை எழுதி வைத்துள்ளார். இந்த குறிப்பு எப்போது எழுதியது? இவர் கடத்திய செம்மரங்கள் மற்றும் வாங்கிய பணத்தின் மதிப்பா? என விசாரிக்க வேண்டி உள்ளது.
டிஎஸ்பி தங்கவேலு கைதான நாளில் எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. எனவே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். நாகேந்திரன் மற்றும் ஜோதிலட்சுமி இருவரையும் போலீஸ் காவலில் விசாரிக்கிறோம். அவர்கள் கூறும் தகவல்களின் அடிப்படையில் தொடர்ச்சியாக டிஎஸ்பியிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.