

‘தி இந்து’ உங்கள் குரல் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட திருவள்ளூரை சேர்ந்த வாசகர் கே.பாஸ்கர் கூறும்போது, ‘‘தெற்கு ரயில்வே பயணிகளின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து கால அட்டவணையை தயாரிக்க வேண்டும். சென்னை சென்ட்ரலில் காலை 6.15-க்கு புறப்படும் கோவை விரைவு ரயில் மதியம் 1.45-க்கு கோவையை சென்றடையும்.
இதேபோல், மறுமார்க்கமாக கோவையில் மதியம் 2.20-க்கு புறப்பட்டு இரவு 9.30-க்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
இந்த கால அட்டவணை முறை கடந்த ஆண்டில் திடீரென மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, கோவை விரைவு ரயில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், தற்போது கோவையில் மதியம் 2.55-க்கு புறப்பட்டு இரவு 10.30-க்கு சென்னை சென்ட்ரலை வந்தடைகிறது.
இதனால், இரவில் வீட்டுக்கு செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதி கிடைக்காததால் பெண்கள், வயதானவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, கோவை விரைவு ரயில் நேரம் பழைய முறையையே பின்பற்ற வேண்டும்’’ என்றார்.
தெற்கு ரயில்வே ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் புதிய கால அட்டவணையை வெளியிட முடிவு செய்துள்ளது. எனவே, ரயில்களின் கால அட்டவணை தயாரிப்புக்கு முன்பு பயணிகள் மற்றும் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்து அறிவிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக திருநின்றவூர் ரயில் பயணிகள் பொதுநலச் சங்கத்தின் செயலாளர் எஸ்.முருகையன் கூறும்போது, ‘‘ஆலோசித்து கால அட்டவணையை தயாரித்தால், பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ள தாக இருக்கும். எனவே, இனி தெற்கு ரயில்வே கால அட்டவணையை தயாரிப்பதற்கு முன்பு எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வலியுறுத்துகிறோம்’’ என்றார்.