

முத்தமிழாக அறியப்பட்ட தமிழ் மொழியை அறிவியல் தமிழ் என நான்காம் தமிழாக அறியச் செய்ததில் முதன்மையானவர் மணவை முஸ்தபா. திண்டுக்கல் மாவட்டத் திலுள்ள பிலாத்து எனும் கிராமத் தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.
தமிழின் மீது தீராத பற்று கொண்டவர். அறிவியல் வளர்ச்சிக்கேற்ப தமிழ்மொழி யையும் வளப்படுத்திட வேண்டும் என்கிற ஆர்வத்தில் அறிவியல் தமிழை இயக்கமாக்கி செயல்பட்டவர்.
அரசினர் கலைக்கல்லூரியில் கிடைத்த ஆசிரியர் பணியை ஏற்காமல்,தென்மொழிகள் புத்தக டிரஸ்ட்டின் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகள், ‘யுனெஸ்கோ கூரியர்’ பன்னாட்டு மாத இதழின் ஆசிரியராக 35 ஆண்டுகள் என விடாது அறிவியல் தமிழ்ப் பணி யைச் சோர்வின்றி செய்தவர் மணவை முஸ்தபா.
கடந்த ஜுன்-15 அன்று தனது எண்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடிய மணவை முஸ்தபா, தான் எழுதிய புத்தகங்களின் குறிப்புகளைக் காட்டியும்,இளைய மகன் டாக்டர் செம்மலின் உதவியோடும் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
தமிழ் உயர்தனிச் செம்மொழி என் பதை நிறுவுவதற்காக 11 தகுதிப் பாடுகளை உருவாக்கியவர் நீங்கள்.அவைகள் பற்றி…
ஒரு மொழி சிறந்த மொழியாக வும், அதிக மக்கள் பேசுகிற மொழி யாகவும் இருப்பதால் மட்டும் அதனை செம்மொழி என்று சொல்லிவிட முடியாது.
அந்தமொழியின் தொன்மை, தனித் தன்மை, பொதுமைப் பண்பு, நடுவு நிலைமை, தாய்மைத் தன்மை, பண்பாடு-கலை- பட்டறிவு வெளிப் பாடு, பிறமொழித் தாக்கமிலா தனித் தன்மை, இலக்கிய வளம், உயர் சிந்தனை, கலை - இலக் கிய தனித்தன்மை வெளிப்பாடு-பங்களிப்பு, மொழிக் கோட்பாடு ஆகிய 11 தகுதிப்பாடுகளும் தமிழ் மொழியில் இருப்பதனால்தான் அதனைச் ‘செம்மொழி’யாக்கிட வேண்டுமென்று தொடர்ந்து பேசி யும், எழுதியும் வந்தேன்.
தமிழைச் செம்மொழியாக மத்திய அரசு அறிவித்ததும் உங்கள் மன நிலை எப்படியிருந்தது?
நீண்ட கால கோரிக்கை நிறை வேறியதில் மகிழ்ச்சியடைந்தேன்.அதேநேரத்தில் யுனெஸ்கோ பன்னாட்டு நிறுவனத்தால் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன் மையான மொழி என்று புகழப்பட்ட தமிழ்மொழியை,1000 ஆண்டுகள் தொன்மையான மொழி என்று கூறி மத்திய அரசு செம்மொழியாக்கியது எனக்கு மிகுந்த மனவருத்தத்தைத் தந்தது. அன்று இரவு நான் சாப்பிடவேயில்லை.
இது குறித்து பலரிடமும் எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.பிறகு, 1,500 ஆண்டுகள் தொன்மையான மொழி என்று மாற்றினார்கள். இந்தக் கால அளவை குறைத்ததற்கு பின்னணி யிலுள்ள அரசியல் சூழ்ச்சி மர்மமாக இருக்கிறது.
அறிவியல்,மருத்துவ,கணினி களஞ்சியத்தில் சுமார் எட்டரை லட்சம் கலைச்சொற்களை எப்படி தொகுத்தீர்கள்?
நவீன அறிவியல் தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துச் சொற்களுக்கும் தமிழ் கலைச்சொற்களை உருவாக்க வேண்டுமென விரும்பினேன். யுனெஸ்கோ கூரியர் தமிழ்ப் பதிப் பின் ஒவ்வொரு இதழிலும் குறைந் தது 50 கலைச் சொற்களையாவது பயன்படுத்தி வந்தேன்.
அந்த 30 ஆண்டுகால பெரும் உழைப்பினால் உருவாக் கப்பட்டதே கலைச் சொற்கள் அகராதிகள்.
அறிவியல் தமிழ் தொடர்பான முயற்சி கள் இப்போது எப்படியுள்ளன?
சில சிறு குழுக்களும், தனி நபர்களும் அவர்களாலான முயற்சிகளை சுய ஆர்வத்தோடும் தன்னெழுச்சியோடும் செய்து வருகிறார்கள். அரசும், பல்கலைக் கழகங்களும் இன்னும் கூடுதலாய் இத்துறையில் பங்களிப்பு செய்திட முன்வர வேண்டும்.
நீங்கள் தற்போது தொடங்கியிருக்கும் அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் நோக்கம் என்ன?
எனது சேமிப்பிலிருந்த ரூ.16 லட்சத்தை முதலீடாக்கி தொடங் கப்பட்டதே அறிவியல் தமிழ் அறக்கட்டளை. இதன் முதன்மை நோக்கமாக தமிழ் மெய்நிகர் ஆவணக் காப்பகம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில், தமிழ் குறித்த அனைத்து ஆவணங் களையும் ஒளிப்படமாக்கி(வீடியோ) வருகிறோம்.
இதுவரை 540 ஆவணங்களைத் தொகுத்துள்ளோம். தமிழ் இலக் கியத்தின் மூலமாக அறிவியலை எப்படிக் கற்பிப்பது என்பது தொடர்பான ஆய்வுகள் இப்போது நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசு அமைத்த தொலைக் காட்சி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்திருக்கிறீர்கள்.இன்றைய ஊடகங்களில் தமிழ் எப்படியிருக்கிறது?
காட்சி ஊடகங்களில் இளைஞர் களின் ஆடல், பாடல் திறன்களுக்கு மட்டுமே அதிக இடம் கொடுக் கிறார்கள். இது மட்டும்தானா இன்றைய இளைஞர்களின் திறமை? சமூகத்தைப் பற்றிய அக்கறையையும், நம் தமிழ்மொழி குறித்த மேன்மையையும் ஊடகங்கள் இன்னும் கூடுதலாய் உணர்ந்துகொண்டு செயல்பட வேண்டும்.
அறிவியல் தமிழை ஆக்கப்பூர்வமாய் பயன்படுத்தினால்,உலகின் கவனம் தமிழர்கள் பக்கமும், தமிழின் பக்கமும் திரும்புவது நிச்சயம்.