

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன், ஜெயக்குமாருக்கு சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் கண் பரிசோதனை செய்யப்பட்டது.
கடந்த 8-ம் தேதி சென்னையில் பேரறிவாளனுக்கு சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனை முடிவு கடந்த 11-ம் தேதி வந்தது. அவரது சிறுநீரகத்தில் சிறு பிரச்சினை இருப்பதும், பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பேரறிவாளன் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் பேரறிவாளன் மற்றும் ராஜீவ் கொலை வழக்கின் இன்னொரு குற்றவாளி ஜெயக்குமார் ஆகிய இருவரையும் கண் பரிசோதனைக்காக, சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு போலீஸார் நேற்று அழைத்து வந்தனர். அவர்கள் இருவரது கண்களையும் டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். பிறகு, 2 பேரையும் போலீஸார் புழல் சிறைக்கு கொண்டுசென்றனர். இதுதொடர்பாக மருத்துவமனை இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் டாக்டர் நமிதா புவனேஸ்வரி கூறும்போது, ‘‘இருவரையும் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்வைக் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக கண்ணாடி அணிந்துகொள்ள பரிந்துரை செய்துள்ளோம்’’ என்றார்.