

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக-வினர் பணம், அதிகார பலத்தைப் பயன்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் புகார் தெரிவித்தார்.
திருச்சி கீழப்புதூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்கப் பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் பேசியது:
மக்கள் நலனுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர், செவிலியர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்பக் கோரியும், தரத்தை மேம்படுத்தக் வலியுறுத்தியும் வரும் 30-ம் தேதி மருத்துவமனையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறவுள்ளது.
ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் அறிவித்தவுடன், அமைச்சர்கள் தலைமைச் செயலகத்துக்குச் செல்லாமல் ஆர்.கே. நகருக்குச் சென்றுவிட்டனர். பணம், அதிகார பலத்தைப் பயன்படுத்தி அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பு வெளியான உடனேயே, “இந்த தீர்ப்பு இறுதியானது அல்ல, மேல்முறையீடு செய்ய வேண்டும்” என முதன்முதலில் கூறியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான்.
அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஊழல் செய்து கட்சி நடத்துவதைவிட, மக்களிடம் உண்டியல் ஏந்தி கட்சி நடத்துவது பெருமைக்குரியது. திமுக, அதிமுகவுக்கு சரியான மாற்று இடதுசாரி கட்சிகள்தான்.
கடந்த 4 ஆண்டுகளில் மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை என பல முறைகேடுகள் நடந்துள் ளன. எனவே, தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டுவரக் கோரி போராட்டம் நடத்த உள்ளோம்.
மோடி அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவந்து, விவசாயிகளின் நிலத்தை அபகரித்து தொழிலதிபர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம் என்றார்.
முன்னதாக, கட்சி நிதியாக ரூ.6.50 லட்சத்தை திருச்சி நிர்வாகிகள் ராமகிருஷ்ணனிடம் வழங்கினர்.