

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சரணாலயத்தில் வேட்டையாடு வது தடுக்கப்பட்டதால் சாம்பல் நிற அணில்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களின் பகுதிகளில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் சாம்பல் நிற அணில் சரணாலயம் அமைந்துள்ளது. வேறு எங்கும் காண முடியாத வகையில் சுமார் 1 மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய சாம்பல் நிற அணில்கள் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன. அதனால், இந்த வனப்பகுதி கடந்த 26.12.1988-ல் சாம்பல் நிற அணில் வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
இச்சரணாலயத்தில் புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், மிளா, காட்டுப் பன்றி, செந்நாய், கரடி, யானை, சிங்கவால் குரங்கு, வரையாடு, சாம்பல் நிற அணில் என 32 வகையான பாலூட்டிகளும், கிரேட் இந்தியன் ஹார்ன் பில், ஸ்ரீலங்கன் பிராக் மவுத், மலபார் விசிலிங் திரஸ், ஜங்கிள் பவுல், ஹார்ன் அவுள் போன்ற 200-க்கும் மேற்பட்ட பறவையினங்களும், 53 வகையான ஊர்வன இனங்களும், நிலத்திலும், நீரிலும் வாழக்கூடிய 24 வகையான உயிரினங்களும், 56 வகையான வண்ணத்துப் பூச்சிகளும், பல்வேறு அரிய வகை தாவரங்களும் காணப்படுகின்றன.
சாம்பல் நிற அணில் வன உயிரின சரணாலயத்துக்கு மேற்குப் பகுதியில் கேரளத்தில் உள்ள பெரியார் புலிகள் காப்பகமும், வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதியில் மேகமலை வன உயிரினக் கோட்டமும், தெற்குப் பகுதியில் திருநெல்வேலி வன உயிரினச் சரணாலயமும் எல்லைகளாக உள்ளன. இதன் மொத்த பரப்பளவு 48,930 ஹெக்டேர். இதில், விருதுநகர் மாவட்டத்தில் 26,709 ஹெக்டேரும், மதுரை மாவட்டத்தில் 22,220 ஹெக்டேரும் உள்ளன.
இச்சரணாலயத்தின் பெரும்பா லான பகுதி மழை மறைவு பிரதேசமாக இருப்பதால் வருடத் தில் பல மாதங்கள் மழையின்றி வறண்டே காணப்படும். இதனால் பல நேரங்களில் தீ விபத்து ஏற்படுவதும் வழக்கம். காட்டுத் தீயை அணைக்கவும், தீ பரவாமல் தடுக்கவும் 3 மீட்டர் அகலத்தில் தீத்தடுப்பு கோடுகளும் வனத் தின் அடிவாரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், களப்பணியாளர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மூலம் தீ அணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது குறித்து மாவட்ட வன உயிரின பாதுகாவலர் அசோக்குமார் கூறியதாவது:
சாம்பல் நிற அணில் வன உயிரின சரணாலயத்தில் திரு வில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, சாப்டூர், சிவகாசி என 5 வனச் சரகங்களும் அதில் மொத்தம் 39 பீட்டுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சாம்பல் நிற அணில்கள் மட்டுமின்றி வன விலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்க 90 அலுவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு திட்டங்களின் கீழ் உள்ளூர் மக்களை இணைத்து 63 வேட்டைத் தடுப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வனப் பகுதியின் நுழைவு பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், சாம்பல் நிற அணில்கள் வேட்டை யாடப்படுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. இதனால், அவற்றின் எண்ணிக்கை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது என்றார்.