Published : 17 Jun 2015 10:11 AM
Last Updated : 17 Jun 2015 10:11 AM

பேசின் பிரிட்ஜ் அருகே பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பெங்களூரு - சென்னை ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. யாருக்கும் காயமும் ஏற்படவில்லை.

சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, "இன்று காலை 4.30 மணியளவில் பெங்களூரு - சென்னை மெயில் ரயில் பேசின் பிரிட்ஜ் பாலத்தை கடந்தபோது எதிர்பாராதவிதமாக தடம் புரண்டது. ரயிலில் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி, இரண்டாம் வகுப்பு ஏ.சி. பெட்டி என இரண்டு பெட்டிகள் மட்டும் தடம் புரண்டன. விபத்து நடந்த அந்தப் பகுதியில் அனைத்து ரயில்களுமே சற்று வேகத்தை குறைத்துச் செல்வது வழக்கம். எனவே, இன்று பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்துக்குள்ளான அந்த இரண்டு பெட்டிகளிலும் இருந்த பயணிகள் வேறு பெட்டிகளுக்கு பத்திரமாக மாற்றப்பட்டனர். உடனடியாக மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. காலை 7.45 மணியளவில் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட ரயில் பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டன. அதுவரையிலான புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது" என்றார்.

இதற்கிடையில், விபத்தால் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் அதிகாலை நேரத்தில் மின்சார ரயில் பயணிகள் அனைவரும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் இருந்து பீச் ரயில் நிலையத்துக்கு அவசர அவசரமாக சென்றனர்.

இதனால் தங்களுக்கு ஏராளமான ஆட்டோ சவாரி கிடைத்ததாக பேசின் பிரிட்ஜ் ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x