

சாலை வரி செலுத்துமாறு கூறி தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த மோட்டார் வாகன ஆய்வாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், சூர்ணபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பி.என்.நடராஜன். இவர் தனது குடும்ப உறுப்பினர்கள் 5 பேரின் சார்பாக கே.பி.என். டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நாடு முழுவதும் இவரது நிறுவனத்துக்குச் சொந்தமான ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெத்திக் குப்பம் சோதனைச் சாவடியில், மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ கே.பி.என். நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து ஒன்று நிறுத்தி சோதனை செய்தார்.
அப்போது, கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திராவுக்குச் செல்லும் கே.பி.என். டிராவல்ஸ் நிறுவனத்தின் 30 பேருந்துகளுக்கு முறையாக வரிச் செலுத்தவில்லை எனக் கூறி ரூ.34 லட்சத்தை அபராதமாக விதித்தார். இதையடுத்து, நிறுவனம் சார்பில் அபராதத் தொகை செலுத்தப்பட்டது. இதையடுத்து, வழக்கம் போல் அந்நிறுவனம் பேருந்துகளை இயக்கி வந்தது.
இதனிடையே, வேறொரு சோதனைச் சாவடியில் சோதனை நடத்திய போது சாலை வரிக்காக அந்த நிறுவனம் செலுத்திய தொகைக்கு வழங்கப்பட்ட ரசீது போலியானது என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கே.பி.என். டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் திருவள்ளூர் எஸ்.பி. சாம்சனிடம் புகார் அளித்தனர்.
அவரது உத்தரவின்பேரில் போலீஸார் விசாரித்ததில் மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.