

பள்ளிக்கட்டிடங்கள், மாணவியர் விடுதிகள், கூடுதல் வகுப்பறைகள் என ரூ.281 கோடியே 17 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
பள்ளி மாணவ, மாணவியர் மேம்பாட்டிற்காக குறிப்பாக ஏழை மக்களின் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்கும் வகையில் கட்டணம் இல்லா கல்வி, சத்தான உணவு, விலையில்லா சீருடைகள், மடிக்கணினிகள் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், ஊக்கத்தொகைகள் உள்ளிட்டவை மற்றும் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 12,251 சதுரடி கட்டட பரப்பில் , தரை மற்றும் ஒரு தளத்துடன் 25 தங்கும் அறைகள், பார்வையாளர் அறை, சமையல் அறை, உணவு உண்ணும் அறை, நுாலகம், குடிநீர், கழிப்பறை வசதிகளுடன் சுமார் 100 மாணவியர் தங்கும் வகையில் ரூ.2.35 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி கட்டிடத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலிகாட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும், பள்ளி மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டுக்காக குறிப்பாக பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் கீழ் ரூ.43.54 கோடியில், கடலுார், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ள அரசு மேல் நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி வளாகங்களில் கட்டப்பட்டுள்ள 18 மாணவியர் விடுதிகள்;
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் ரூ.52.36 கோடியில் கட்டப்பட்டுள்ள 77 பள்ளிக் கட்டிடங்கள்; 149 அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் ரூ.36.44 கோடியில் கட்டப்பட்டுள்ள 484 கூடுதல் வகுப்பறைகள்; 143 அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் ரூ.11.48 கோடியில் கட்டப்பட்டுள்ள 143 அறிவியல் ஆய்வுக் கூடங்கள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
வட்டார அளவில் கல்வி நிர்வாகம் செம்மையாக அமையும் பொருட்டு பகுதி-2 திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம்- மேலுார் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியங்களி்ல ரூ.39.50 லட்சம் மதிப்பில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகங்கள்; நபார்டு வங்கி கடன் உதவித்திட்டத்தின் கீழ் 17 மாவட்டங்களில் அமைந்துள்ள 51 அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் ரூ.62 கோடியே 47 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் ஆய்வக்கூடங்கள், சுற்றுச்சுவர், குடிநீர் மற்றும் கழிப்பறைகள்;பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் ரூ.70 கோடியே 92 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 721 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 1240 கூடுதல் வகுப்பறைகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும், கோவை - வால்பாறை அரசு உண்டு உறைவிட பள்ளியில் ரூ.43.50 கோடியில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கட்டிடம்; பொதுமக்களிடம் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் பொருட்டு பொது நூலக இயக்கத்தின் கீழ் திருச்சி- ஸ்ரீரங்கம் மற்றும் துறையூர் ஆகிய இடங்களில் 78 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கிளை நூலகக் கட்டடங்கள் என மொத்தம் ரூ.281 கோடியே 17 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்கள், மாணவியர் விடுதிகள் போன்றவற்றை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பள்ளிக்கல்வித்துறை செயலர் த.சபீதா மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.