Published : 17 Jun 2015 08:03 PM
Last Updated : 17 Jun 2015 08:03 PM

வேளாண் துறை சார்பில் ரூ.68.68 கோடியில் கட்டிடங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்தார்

வேளாண்துறை சார்பில் ரூ.68.68 கோடியில் கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் ஜெயலலிதா, 29 ஜீப்புகளையும் அத்துறையினருக்கு வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''நாட்டின் முதன்மைத் தொழிலாகவும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் வேளாண் தொழிலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திருநெல்வேலி, பாவூர்சத்திரத்தில் 22,927 சதுர அடி பரப்பில் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மிளகாய் குளிர்பதன கிடங்கை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மேலும், கடலூர்- காட்டுமன்னார்கோயில்; விழுப்புரம்- கள்ளக்குறிச்சி; திருச்சி- துவரங்குறிச்சி; தேனி- போடிநாயக்கனூர்; தருமபுரி- பென்னாகரம் ஆகிய இடங்களில் 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 6 நவீன சேமிப்பு கிடங்குகள், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை, வேலூர், திருச்சி, ஈரோடு, தருமபுரி, விழுப்புரத்தில் கட்டப்பட்டுள்ள 17 குளிர்பதன கிடங்குகள், கோவை- அன்னூர், தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் காரமடை; திண்டுக்கல், நத்தம், பழனி, வத்தலகுண்டு மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 10 தரம் மதிப்பிடுதல் மற்றும் பிரித்தல் கூடங்களையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மேலும், தூத்துக்குடி; கடலூர்- பன்ருட்டி; ஈரோடு- பெருந்துறை; திருப்பூர்- காங்கேயம்; ஆகிய இடங்களில் 4 அக்மார்க் ஆய்வக கட்டிடங்கள், தேனி- போடி; ஈரோடு- பவானி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 2 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், திருவண்ணாமலை- வந்தவாசி, ஆரணி, போளூர்; தருமபுரி; கிருஷ்ணகிரி; திருப்பூர்- வெள்ளக்கோயில் ஆகிய இடங்களில் 6 பரிவர்த்தனை கூடங்கள்; கிருஷ்ணகிரி- போச்சம்பள்ளி; நாமக்கல்- புதன்சந்தை; கோவை- பூலுவாப்பட்டி; திண்டுக்கல் - வேடசந்தூர்; மதுரை- மணியஞ்சி; ஈரோடு- கவுந்தப்பாடி; சேலம் - தாரமங்கலம்; விழுப்புரம்- மூங்கில் துறைப்பட்டு; ;நெல்லை- பாவூர்சத்திரம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 9 கிராமிய சந்தைகளுக்கான தரம் பிரித்தல் கூடங்களையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

தமிழகத்தில் முதல் முறையாக கோவை- திப்பம்பட்டியில் கட்டப்பட்ட இளநீர் வணிக வளாகம்; கடலூர், திருநெல்வேலி- பாவூர்சத்திரம், ராமநாதபுரம்- பரமக்குடி ஆகிய இடங்களில் 3 வணிகர் கடைகள்; கோவை- கிணத்துக்கடவு; திருச்சி-நாவலூர்குட்டப்பட்டு ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 2 உணவு பதப்படுத்துதல் மற்றும் பயிற்சிக் கூடங்கள்; தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நீலகிரி- தொட்டபெட்டாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேயிலை பூங்கா மற்றும் தேவாலாவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா; ராமநாதபுரம்- அச்சடிப்பிரம்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள மரபணு பூங்காவையும் முதல்வர் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டையில் கட்டப்பட்டுள்ள தோட்டக்கலை தகவல் மையம் ; ஈரோடு- சத்தியமங்கலத்தில் உழவர் மையம்; புதுக்கோட்டை- குடுமியான்மலையில் கட்டப்பட்டுள்ள நுண்ணூட்டக் கலவை சேமிப்புக் கிடங்கு; சேலத்தில் கட்டப்பட்டுள்ள உரக் கட்டுப்பாட்டு ஆய்வகம்; ஈரோடு, சேலம், வேலூர், திருச்சி, கடலூர், மதுரை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வகங்கள் என ரூ.68 கோடியே 68 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான வேளாண்துறை கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்துவைத்தார்.

இந்திய அளவில் தற்போது 68 பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வகங்கள்தான் இயங்கி வருகின்றன. தற்போது திறக்கப்பட்டுள்ள 6 பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வகங்களையும் சேர்த்து தமிழகத்தில் மட்டும் 15 பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வகங்கள் உள்ளன. இதன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வகங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆகிய துறைகளின் கீழ் இயங்கும் மாவட்ட அளவிலான துணை இயக்குநர்களின் அலுவலக பயன்பாட்டுக்காக ரூ.1 கோடியே 83 லட்சத்து 82 ஆயிரம் செலவில் வாங்கப்பட்ட 29 ஜீப்புகளை வழங்கும் அடையாளமாக 2 ஓட்டுநர்களுக்கு வாகனத்துக்கான சாவியை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். கட்டிடங்கள் மற்றும் ஜீப்புகளின் மொத்த மதிப்பு 70 கோடியே 52 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் ஆகும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x