

கோவையில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட்கள் 5 பேருக்கும், நீதிமன்றக் காவலை ஜூலை 2-ம் தேதி வரை நீட்டித்து கோவை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள பேக்கரியில் கடந்த மே 4-ம் தேதி கோவை போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் ரூபேஸ் அவரது மனைவி சைனா மற்றும் ஈஸ்வரன், கண்ணன், அனூப் மேத்யூ. இவர்களில் ரூபேஸ், சைனா கேரள போலீஸாரால் தேடப்படும் மாவோயிஸ்ட்களில் முக்கியமானவர்கள் என அந்த மாநில போலீஸார் தெரிவித்தனர். இவர்கள் மீது கேரளத்தில் மட்டுமின்றி ஆந்திராவிலும் பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் 5 பேரில் ரூபேஸ் மற்றும் சைனா ஆகியோரை கேரளா போலீஸார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. எனவே காவல் நீட்டிப்பு செய்ய, கோவை மத்திய சிறையில் இருந்து ஈஸ்வரன், கண்ணன், அனூப் மேத்யூ ஆகியோரும், கேரளாவில் இருந்து ரூபேஸ், சைனா ஆகியோரும் கோவை நீதிமன்றத்துக்கு நேற்று அழைத்து வரப்பட்டனர்.
கோவை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி சக்திவேல் முன்பு 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, வரும் ஜூலை 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் தமிழக, கேரள போலீஸார் குவிக்கப் பட்டிருந்தனர்.
நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட அவர்கள், முழக்கங்களை எழுப்பினர்.
“மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்தும், கர்நாடக தேசிய பூங்காவில் இருந்தும் ஆதிவாசி மக்களை வெளியேற்ற நடக்கும் முயற்சிகளுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடரும். எங்கள் மீது எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டோம், அதை எதிர்கொள்வோம். எங்களை விசாரணைக்கு ஆந்திராவுக்கு அழைத்துச் செல்ல போலீஸார் திட்டமிட்டுள்ளனர்’’ என நீதிமன்ற வளாகத்தில் 5 பேரும் தெரிவித்தனர்.
காவல் நீட்டிப்பைத் தொடர்ந்து ரூபேஸ், சைனா ஆகியோரை கேரள போலீஸார் அழைத்து சென்றனர். மற்ற மூவரும் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.