Published : 26 May 2014 09:31 AM
Last Updated : 26 May 2014 09:31 AM

மெட்ரோ சுரங்கப் பாதை கழிவுகளை உயரத்தில் இருந்து கொட்டுவதால் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க சைதை மக்கள் கோரிக்கை

மெட்ரோ ரயில் பணியின்போது சுரங்கப் பாதையில் இருந்து வெளியேற்றப்படும் மணல், சேறு ஆகியவை சைதாப்பேட்டையில் பல அடி உயரத்தில் இருந்து கன்வேயர் பெல்ட்டில் இருந்து கீழே கொட்டுவதால் பல பாதிப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

சென்னையின் போக்குவரத்து தேவையைக் கருத்தில் கொண்டு 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் நடந்துவருகின்றன. வண்ணாரப் பேட்டையில் இருந்து பிராட்வே, சென்ட்ரல், அண்ணா சாலை, சைதாப்பேட்டை, கிண்டி வழியாக விமான நிலையம் வரை ஒரு வழித்தடம். சென்ட்ரலில் தொடங்கி வேப்பேரி, அமைந்தகரை, அண்ணா நகர், கோயம்பேடு, வட பழனி, அசோக் நகர், ஆலந்தூர் வழியாக மவுன்ட் வரை ஒரு வழித்தடம் என இரு மார்க்கங் களிலும் பணிகள் முழு வீச்சில் நடந்துவருகின்றன.

சில இடங்களில் உயர்த்தப்பட்ட மேம்பாலம், சில இடங்களில் சுரங்கப்பாதை என மாறி மாறி வழித் தடங்கள் அமைக்கப்பட்டு வரு கின்றன. முதல் தடத்தைப் பொறுத் தவரை, வண்ணாரப்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை சுரங்கப் பாதையாகவும் அதன் பிறகு, விமான நிலையம் வரை உயர்த்தப்பட்ட பாலமாகவும் அமைக்கப்படுகிறது.

கன்வேயர் பெல்ட்டில் கழிவுகள்

டி.எம்.எஸ். முதல் சைதாப் பேட்டை வரையிலான சுரங்கப் பாதை பணியில் தினமும் எடுக்கப் படும் கழிவுகள் 2 கன்வேயர் பெல்ட்கள் மூலம் சைதாப்பேட்டை யில் வெளியேற்றப்படுகின்றன. இதில் ஒரு கன்வேயர் பெல்ட்டில் சுரங்கப் பாதையில் இருந்து வெளியே எடுத்துவரப்படும் மணலும், இன்னொரு கன்வேயர் பெல்ட்டில் கருப்பு நிறச் சேறும் வெளியேற்றப்படுகிறது.

40 அடி உயரத்தில் இருந்து..

தரையில் இருந்து சுமார் 40 அடி உயரத்தில் கன்வேயர் பெல்ட் உள்ளது. அந்த உயரத்தில் இருந்து மணல், சேறு ஆகியவை தடுப்பு வேலியைத் தாண்டி வெளியில் விழாமல் இருக்க நைலான் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த தடுப்பு கிழிந்துள்ளது. மேலும் சில இடங் களில் கன்வேயர் பெல்ட் உயரம் வரை நைலான் வலை இல்லை. இதனால் மணல், சேறு ஆகியவை சாலையில் வந்து விழுகின்றன. கன்வேயர் பெல்ட் உள்ள பகுதிக்கு அருகில் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை, காய்கறிச் சந்தை, பேருந்து நிலையம், உணவகங்கள் உள்ளன. அதிக உயரத்தில் இருந்து இந்த கழிவுகள் விழுவதால் அருகே இருப்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

சாலையில் சிதறும் சேறு

அது மட்டுமின்றி, இரவில் லாரிகள் மூலம் கொடுங்கையூர் கொண்டு செல்லப்படும் சேறு, சைதாப்பேட்டை பாலத்தில் இருந்து சின்னமலை பேருந்து நிலையம் வரை விழுவதால் சாலை முழுவதும் சேற்றுக் கழிவு சிதறுகிறது. காற்று வீசும்போது தூசிகளுடன் கலந்து சேறு வருவதால் சுவாசப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் அப்பகுதியினர்.

இதுகுறித்து சைதாப்பேட்டை பாலத்தையொட்டி வசிப்பவர்கள் கூறுகையில், ‘‘பெல்ட்டில் இருந்து சேறு வெளியே சிதறி சாலையில் விழுகிறது. இதில் பலர் வழுக்கி விழுகின்றனர். சுரங்கப் பாதை மணல் காற்றில் பறப்பதால் நெடி வீசுகிறது. மூச்சுத் திணறல் ஏற்படுகிறது’’ என்றனர். ஆட்டோ ஓட்டுநர் தனசேகரன் கூறும்போது, ‘‘கன்வேயர் பெல்ட்டில் இருந்து சேறு விழும்போதும் அதை சுத்தப்படுத்தும்போதும் மழைச் சாரல் போல மக்கள் மீது சேறு விழுகிறது’’ என்றார்.

விரைவில் நடவடிக்கை

இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை மெட்ரோ ரயில் பணியின்போது சுரங்கப் பாதை களில் இருந்து எடுக்கப்படும் கழிவு சேறு, மணல் ஆகியவை எதற்கும் உதவாது. பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் இந்த கழிவுப் பொருட்கள் கொட்டப் பட்டு வந்தது. அங்கு இடப் பற்றாக்குறை காரணமாக தற்பே ாது கொடுங்கையூர் பகுதியில் கொட்டப்படுகிறது. இந்தக் கழிவு கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

சைதாப்பேட்டையில் கன்வேயர் பெல்ட் பகுதியை ஆய்வு செய்து, மக்களுக்கு எந்த வகையிலும் தொந்தரவு ஏற்படாத வகையில் அவற்றை அகற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மெட்ரோ ரயில் அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x