ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஜெயலலிதா வேட்புமனு தாக்கல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஜெயலலிதா வேட்புமனு தாக்கல்
Updated on
2 min read

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா நேற்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

சென்னை டாக்டர் ராதாகிருஷ் ணன் நகர் (ஆர்.கே.நகர்) சட்டப் பேரவை தொகுதி அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் கடந்த மாதம் 17-ம் தேதி ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, அந்த தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது.

இடைத்தேர்தல் தொடர்பான முறையான அறிவிக்கை கடந்த 3-ம் தேதி வெளியிடப்பட்டதும், வேட்புமனு தாக்கலும் தொடங்கியது. சுயேச்சை வேட்பாளர்களாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன், அகமது ஷாஜஹான் ஆகியோரும், இந்தியக் குடியரசுக் கட்சி சார்பில் ரவி பறையனார், மதச்சார்பற்ற இந்திய மக்கள் கட்சி சார்பில் ஆபிரகாம் ராஜ்மோகன் என 5 பேர் அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் 4-ம் தேதி யாரும் மனுத் தாக்கல் செய்ய வில்லை.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, நேற்று பிற்பகல் 2.05 - 2.08 மணிக்குள் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

முன்னதாக, போயஸ் தோட்டம் வீட்டில் இருந்து அவர் பிற்பகல் 1.28 மணிக்கு புறப்பட்டார். புனித ஜார்ஜ் கோட்டையை தாண்டி ரிசர்வ் வங்கி அலுவலகம் அருகில் வந்தபோது, அவரது வாகனத்தில் இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டு, அதிமுக கட்சிக் கொடி பொருத்தப்பட்டது. வாகனத்தில் இருந்த தமிழக அரசு சின்னமும் மறைக்கப்பட்டது.

அங்கிருந்து ராயபுரம், காசிமேடு வழியாக திருவொற்றியூர் நெடுஞ்சாலை வந்தார். அங்கு மாநகராட்சி 4-வது மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு பிற்பகல் 2.05 மணிக்கு வந்தார். அவரை ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அலுவலகத்துக்குள் முதல்வர் ஜெயலலிதாவுடன் தோழி சசிகலா, அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், வடசென்னை அதிமுக எம்.பி. வெங்கடேஷ்பாபு ஆகியோர் சென்றனர். அங்கு தேர்தல் அலுவலர் கே.சவுரிராஜனிடம் வேட்புமனுவை முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார். அவரது பெயரை ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளரும் அதிமுக மருத்துவர் அணி இணை செயலருமான டாக்டர் காளிதாஸ் முன்மொழிந்தார். வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு ஜெயலலிதா பிற்பகல் 2.08 மணிக்கு வெளியே வந்தார். காரில் ஏறி புறப்படும்போது, அங்கு நின்றிருந்த தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூதிடம் நலம் விசாரித்துவிட்டு போயஸ் தோட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

மாற்று வேட்பாளர் மதுசூதனன்

ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்ததும், மாற்று வேட்பாளராக அதிமுக சார்பில் அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் மனுத் தாக்கல் செய்தார்.

ஜெயலலிதா வருவதையொட்டி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, ராயபுரம், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அதிமுகவினரும் பொதுமக்களும் பிற்பகல் 12 மணியில் இருந்தே காத்திருந்தனர். வழியில் ஆங்காங்கே மலர் தூவி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

கம்யூனிஸ்ட்கள் சார்பில் சி.மகேந்திரன் போட்டி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக 40 ஆண்டுகளாக இருக்கும் மகேந்திரன், மாணவர் மன்றம் உள்ளிட்ட அமைப்புகளின் மாநிலத் தலைவராக இருந்தவர். மாநில துணைச் செயலாளராக 18 ஆண்டுகள் இருந்தவர். இதுவரை எந்தத் தேர்தலிலும் போட்டியிடாத அவர், முதல்முறையாக ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார். அவர் வரும் 9-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in