Published : 03 Mar 2014 12:00 AM
Last Updated : 03 Mar 2014 12:00 AM

ஜெயலலிதா பிரச்சாரம்: 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு

காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா, தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறார்.

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் 40 தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்நிலை யில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, மார்ச் 3-ம் தேதி அன்று காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதாக அவர் அறிவித்திருந்தார்.

பிரச்சார இடம் தேர்வு

இதைத் தொடர்ந்து, காஞ்சி புரத்தில் பிரச்சார மேடை அமைக்க முதலில் காந்தி ரோடில் உள்ள தேரடியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பிரச்சார மேடை வடக்கு நோக்கித்தான் இருக்க வேண்டும் என்று கட்சித் தலைமை விரும்பியது. இதனால் பிரச்சார மேடை, காமராஜர் சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தை அடுத்த நத்தப்பேட்டையில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் முதல்வர் மதியம் 3 மணியளவில் வந்து இறங்குவார் எனத் தெரி கிறது. சுமார் 4 மணியளவில் மேடையேறி, காஞ்சிபுரம் தனித் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேலுவை அறிமுகப்படுத்தி பிரச்சாரம் செய்ய உள்ளார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் கூறியதாவது: "பாதுகாப்பு பணிகளுக்காக, காவல்துறை வடக்கு மண்டல ஐஜி மஞ்சுநாதா, டிஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமையில், 5 எஸ்பி-க்கள், 7 ஏடிஎஸ்பி-க்கள், 30 டிஎஸ்பி-க்கள், 60 ஆய்வாளர்கள் உள்பட 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்" என்றார்.

பிரச்சார மேடை பகுதி முழு வதையும் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்டு, தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள வணிக நிறுவனங்களை திங்கள் கிழமை முழுவதும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

பிற்பகல் 1 மணி வரை ஒலிபெருக்கிகள் இயங்காது

இன்று 12-ம் வகுப்புத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், பிரச்சாரம் நடைபெற உள்ள இடத்தைச் சுற்றியுள்ள பல பள்ளிகளில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஒலிபெருக்கி சத்தம் தொல்லையாக இருக்காதா என்று கேட்டோம். பிரச்சார விழா ஏற்பாட்டை மேற்கொள்ளும் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக செயலர் பா.கணேசன், "12-ம் வகுப்புத் தேர்வு முடியும் வரை ஒலிப்பெருக்கிகள் இயங்காது" என்றார்.

போக்குவரத்தில் மாற்றம்

காலை 10 மணிக்கு மேல் உத்திரமேரூர் மற்றும் செங்கல் பட்டிலிருந்து வரும் பேருந்துகள் ஓரிக்கை தற்காலிகப் பேருந்து நிறுத்தத்திலும், சென்னையிலிருந்து வரும் பேருந்துகள் பூக்கடை சத்திரம் பேருந்து நிறுத்தத்திலும் நிற்கும். வேலூரிலிருந்து வரும் பேருந்துகள் ஒலிமுகமதுபேட்டையில் நிற்கும். வந்தவாசியிலிருந்து வரும் பேருந்துகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நிற்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x