

மதுரையில் நடைபெற்ற கொள்ளை, வழிப்பறி, திருட்டு வழக்குகளில் ஈடுபட்டவர்களை கைது செய்ய காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவின் பேரில், குற்றப்பிரிவு துணை ஆணையர் உமையாள் மேற்பார்வையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இவர்கள் சுமார் 60-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கைது செய்து தங்கம், வெள்ளி நகைகள், இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இவர்களில் வயதான தொழில்முறை திருடர்களின் எண்ணிக் கைக்கு இணையாக, 20 வயதுக்கும் குறைவான இளம்குற்றவாளிகளும் இருந்தது காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுபற்றி அவர்கள் கூறும்போது, மதுரையில் திருட்டு, கொள்ளை, செயின் பறிப்பு போன்ற வழக்குகளில் மட்டும் கடந்த 5 மாதத்துக்குள் 27 இளம் குற்றவாளிகள் கைது செய்யப்பட் டுள்ளனர். ரவுடி கும்பலுடன் தொடர்பு வைத்து கொலை உள்ளிட்ட வழக்குகளில் சிக்குவோரில் சிறுவர்கள் அதிகமாக உள்ளனர்.
விலையுயர்ந்த செல்போன், பைக் வாங்குவது, தினமும் மது, கஞ்சா உட்கொள்வதற்கான பணத்துக்காவே குற்றங்களில் ஈடுபடுவதாக கூறுகின்றனர். சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும் விவரம் போலீஸில் சிக்கும்வரை அவர்களது குடும்பத்தினருக்கே தெரிவ தில்லை. பெற்றோர் தங்களது மகன்களின் அன்றாட நடவடிக்கைகளை கண் காணிக்க வேண்டும். அதில் மாற்றம் இருந்தால் அதுபற்றி விசாரித்து நல் வழிப்படுத்த முயற்சிக்க வேண்டும். இல்லாவிடில் அவர்களின் குடும்ப முன்னேற்றத்துக்கும் மட்டுமின்றி நாட்டுக்கும் கேடாக அமைந்துவிடும் என்றனர்.