

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள நுண் பார்வையாளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் விக்ரம் கபூர் தலைமையில் நேற்று சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் 27-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்காக 230 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் முதன்மை அலுவலர், வாக்குப் பதிவு அலுவலர்களுடன் கூடுதலாக ஒரு நுண் பார்வையாளரும் நியமிக்கப்படவுள்ளார்.
இந்த நுண் பார்வையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலக கூட்ட அரங்கில் 2 கட்டங் களாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையரு மான விக்ரம் கபூர் தலைமையில் நடந்தது. இதனை தேர்தலுக்கான பொதுப்பார்வையாளர் ஜோதி கலேஷ் தொடங்கி வைத்தார்.
வாக்குப்பதிவு நாளன்று, மாதிரி வாக்குப் பதிவு நடத்துவதில் தொடங்கி வாக்குப்பதிவு நிறைவடைவது வரை எப்படி கண்காணிக்க வேண்டும் என்று நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. வேட்பாளர்களின் முகவர்கள் ஏதேனும் புகார் அளித்தால், அது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அறிக்கை அளிப்பது, தேர்தல் நெறிமுறைகளை பின்பற்றுவது என பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலரும் சென்னை மாவட்ட ஆட்சிய ருமான எ.சுந்தரவல்லி, சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையர் எம்.லட்சுமி, தேர்தல் நடத்தும் அலுவலர் கே.சவுரிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.