Published : 04 May 2014 10:26 AM
Last Updated : 04 May 2014 10:26 AM

கொடைக்கானல் ஏரியில் சுற்றுலாப் பயணிகள் `லைப் ஜாக்கெட் இல்லாமல் படகு சவாரி: அசம்பாவிதம் நடக்கும் முன்பு விழித்துக்கொள்ளுமா அரசு?

கொடைக்கானல் ஏரியில் சுற்றுலா பயணிகள், ஆபத்து காலத்தில் தண்ணீரில் மூழ்காமல் பாதுகாக்கும் `லைப் ஜாக்கெட்' அணியாமல் படகு சவாரி செல்கின்றனர். அதனால், உயிரிழப்பு ஆபத்து ஏற்படும் முன் படகு சவாரி செய்யும் பயணிகள் லைப் ஜாக்கெட் அணிவதைக் கட்டாயமாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் தென்னிந்தி யாவின் புகழ்பெற்ற கோடை வாசஸ்தலமாக விளங்குகிறது. இங்கு பிரிட்டிஷார், 1863-ம் ஆண்டு விண்மீன் வடிவத்தில் செயற்கைமுறையில் 60 ஏக்கரில் கொடைக்கானல் ஏரியை உருவாக்கினர். இந்த ஏரி, தற்போது கொடைக்கானலின் முக்கிய சுற்றுலாத் தலமாகப் பயணிகளைக் கவர்ந்துள்ளது.

இந்த ஏரியில் சுற்றுலாத் துறை, நகராட்சி மற்றும் தனியார் போர்ட் கிளப் ஆகியன மூலம் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க படகுகள் இயக்கப்படுகின்றன. இந்த ஏரியில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகள், குடும்பத்துடன் குதூகலமாக படகுசவாரி சென்று ஏரியின் இயற்கை அழகைக் கண்டு ரசிக்கின்றனர். கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் மழைபெய்யாவிட்டாலும், இந்த ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செல்வதற்காக தண்ணீர் வற்றாமல் பாராமரிக்கப்படுகிறது.

கடந்த 2009 செப். 30-ம் தேதி தேக்கடி படகு விபத்தில் 45 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பின், தமிழகத்தில் ஏரிகளில் படகுசவாரி செய்யும் அனைவரும் கட்டாயம் லைப் ஜாக்கெட் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அரசின் உத்தரவு தற்போதுவரை கொடைக்கானல் ஏரியில் நடைமுறைக்கு வரவில்லை. சாதாரண நாள்களிலே கொடைக்கானல் ஏரியில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு படகுசவாரி செல்வார்கள். தற்போது கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் ஏரியில் படகுசவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. கோடை விழா மலர் கண்காட்சி நேரத்தில், படகு சவாரி செய்ய கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழியும். அதனால், படகுகளில் நிர்ணயிக்கப்பட்ட நபர்களைவிட கூடுதலாக படகு சவாரி செல்வார்கள். அதனால் படகு கவிழ்ந்தாலும் சுற்றுலாப் பயணிகள் லைப் ஜாக்கெட் அணிந்தால் அவர்கள் உடனடியாக நீரில் மூழ்காமல் உயிர் பிழைக்கலாம். ஆனால், தற்போது கொடைக்கானல் ஏரியில் லைப் ஜாக்கெட் அணியாமல் சுற்றுலாப் பயணிகள் செல்வதால், உயிர்பலி ஏற்படும் அபாயம் ஏற்பட் டுள்ளது.

இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சரவணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: படகு சவாரி செல்பவர்கள் லைப் ஜாக்கெட் அணிவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x