

அரசு மருத்துவமனையில் பணிபுரிய தொகுப்பூதிய அடிப் படையில் 7,243 செவிலியர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் 89 மையங்களில் நேற்று நடந்தது. இதில், மொத்தம் 38,116 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தொகுப் பூதிய அடிப்படையில் செவிலியர் களை நியமிக்க தமிழக அரசு திட்டமிட்டது. இதையடுத்து, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) 6,792 பெண் செவிலியர்கள், 451 ஆண் செவிலியர்கள் என மொத்தம் 7,243 செவிலியர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துதேர்வை சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை என 5 நகரங்களில் மொத்தம் 89 மையங்களில் நேற்று நடத்தியது.
குறிப்பாக, சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், எத்திராஜ் மகளிர் கல்லூரி, மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி என மொத்தம் 16 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு மையங்களில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு நடத்தினர். காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணிவரை தேர்வு நடந்தது.
தேர்வு முடிவுகள் எப்போது?
இது தொடர்பாக மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘தமிழகம் முழுவதும் 89 மையங் களில் தேர்வு நடந்தது. செவிலியர் பணிக்கு விண்ணப்பித்த 40,432 பேரில் 38,116 பேர் தேர்வை எழுதினர். மீதமுள்ள 2,316 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. தேர்வில் எடுத்த ரேங்க் பட்டி யல், மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு முடிவு வெளியிடு வதற்கான தேதியை விரைவில் அறிவிப்போம்’’ என்றனர்.