Published : 25 Mar 2014 10:17 AM
Last Updated : 25 Mar 2014 10:17 AM

சென்னையில் விறுவிறு ‘வாக்குப்பதிவு’ மாதிரி பூத்களில் அலைமோதிய மக்கள்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் பல இடங்களிலும் திங்கள்கிழமை மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் பொன்னான வாக்குகளை ‘டம்மியாக’ பதிவு செய்தனர்.

ஓட்டு போடுவதன் முக்கியத்துவத்தை இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக் களிடம் வலியுறுத்தும் விதமாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சியின் ராய புரம் மண்டலத்துக்கு உட்பட்ட 3 இடங்களில் திங்கள்கிழமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. எழும்பூர் ரயில் நிலையம் அருகே, வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகே, தங்கசாலை அரசு அச்சகம் அருகே என 3 இடங்களில் மாதிரி வாக்குச் சாவடிகளை தேர்தல் அதிகாரிகள் அமைத்திருந்தனர்.

வாக்குச் சாவடி அலுவலர்கள், வாக்காளர் பதிவேடு, விரல் மை, சுயேச்சை சின்னங்கள் மற்றும் நோட்டா பட்டனுடன் கூடிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் சகிதமாக அச்சு அசலாக தேர்தல் போலவே மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு ஓட்டுப்பதிவு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி காலை முதல் மாலை வரை நடந்தது.

இந்த வாக்குச் சாவடிகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குவிந்து ஆர்வத்துடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதுவரை வாக்களிக்காமல் தவிர்த்தவர்கள், புதிய வாக்காளர்களுக்கு இருந்த பலவிதமான சந்தேகங்களை தீர்க்கும் விதமாக மாதிரி வாக்குச்சாவடிகள் இருந்தன. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று பொதுமக்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x