

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீஸாரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓடினார். அவரை விரட்டிப் பிடிக்க முயன்ற போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருந்தவர் சுரேஷ் என்ற நிஷாந்தன் (28). கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்றதற்காக கைதான சுரேஷ், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சுரேஷை புதுக் கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக கடந்த 9-ம் தேதி பேருந்தில் அழைத்துச் சென்றனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு சுரேஷ் மற்றும் வேறு 2 கைதிகளுடன் போலீஸார் சென்னைக்கு பேருந்தில் புறப்பட்டனர். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு அவர்கள் வந்து சேர்ந்தனர். அப்போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்று போலீஸாரிடம் சுரேஷ் கூறியுள்ளார். அதனால் அவரது கை விலங்கை போலீஸார் கழற்றினர். அப்போது திடீரென்று போலீஸாரை தள்ளிவிட்டு சுரேஷ் தப்பி ஓடினார்.
அப்போது போலீஸ்காரரர் லாசர் மகிமைதாஸ், சுரேஷை விரட்டிச் சென்றார். அங்கிருந்த சுவரில் ஏறி குதிக்கும் போது, லாசர் மகிமைதாஸின் கால்கள் உடைந்தன. மேல் சிகிச்சைக்காக அவர் பரங்கிமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.