

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தமிழக அரசு இலவசமாக ஹெல்மெட் வழங்க வேண்டும் என்றார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் ஈஸ்வரன்.
இக்கட்சி சார்பில் பிளஸ் 2 மாணவருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி கரூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற் ஈஸ்வரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு வெற்றி கிடைத்தைப் பொறுக்க முடியாத கேரள அரசு, தமிழகத்திலிருந்து வரும் காய்கறிகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை என்று கூறி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில ஒற்றுமையைப் பாதிக்கும் வகையில் செயல்படும் கேரள அரசை கடுமையாக எச்சரிக்கிறோம். கரூர் மாவட்டத்தில் புகழூரை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் ஏற்படுத்த வேண்டும். அதேபோல, புகழூர் பகுதியில் காவிரியில் தடுப்பணை கட்டி, மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவாக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தமிழக அரசு இலவசமாக ஹெல்மெட் வழங்க வேண்டும் என்றார்.