Published : 08 Jun 2015 10:31 AM
Last Updated : 08 Jun 2015 10:31 AM

மேகி நூடுல்ஸ் உணவுக்கு தடை விதித்தது சரியானதுதான்: உங்கள் குரலில் பொது மக்கள் கருத்து

நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவுப் பொருட்களுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை பற்றியும், இத்தகைய துரித உணவுகளால் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு கருத்து தெரிவிக்குமாறு தாய்மார்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம். தாய்மார்களுக்கு மட்டுமே வேண்டு கோள் விடுத்த போதிலும் ஆண்கள், பெண்கள் என இரு தரப்பையும் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் உங்கள் குரல் மூலம் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.

அவ்வாறு வாசகர்களில் சிலரது கருத்துகள் வருமாறு:

எஸ்.கிருஷ்ணமூர்த்தி (தனியார் நிறுவன ஊழியர், மந்திதோப்பு, தூத்துக்குடி மாவட்டம்):

நூடுல்ஸ் உணவுக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது வரவேற் கத்தக்கது. நூடுல்ஸ் உடல் நலத் துக்கு தீங்கு என்பதை அறியாமல் அதை நாங்கள் பயன்படுத்தி வந் தோம். நூடுல்ஸுக்கு தடை விதித் தது போன்று கோக், பெப்சி ஆகிய குளிர்பானங்கள் மற்றும் மது, புகையிலை ஆகியவற்றுக்கும் தடை விதிக்க வேண்டும்.

கே.வினோத்ராஜா (பள்ளி ஆசிரியர், சிக்கப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம்):

மேகி நூடுல்ஸ் மீதான தடை வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் கிடைக்கும் உணவிலேயே நல்ல ஊட்டச்சத்துகள் உள்ளன. அதை உண்டவர்கள் பலர் நோய் தாக்காது 100 ஆண்டுகள் வாழ்வதை நாம் பார்க்கிறோம். நம் சூழலுக்கும், தட்பவெப்பத்துக்கும் பொருந்தாத வெளிநாட்டு உணவுகளை மோகம் கொண்டு சாப்பிட்டால் நோய்கள் வரத்தான் செய்யும். இதே போன்று வெளிநாட்டு குளிர்பானங்களை தீவிரமாக சோதனை செய்து மக் களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும். முக்கியமாக குழந்தை களை அவற்றின் பிடியிலிருந்து மீட்க வேண்டும்.

லோகேஸ்வரி (10-ம் வகுப்பு மாணவி, ஜோலார்பேட்டை, வேலூர் மாவட்டம்):

மேகி நூடுல்ஸை முழுவதுமாக தடை செய்ய வேண்டும். அரசு தடை செய்த பிறகும், கடைகளில் மேகி நூடுல்ஸ் விற்பனை செய்யப் படுகிறது. அதனால் கடைகளில் உள்ள மேகி நூடுல்ஸ்களை பறி முதல் செய்ய வேண்டும். மேகி நூடுல்ஸ் மட்டுமில் லாமல் கலப்படம் செய்யப் பட்டுள்ள பால் பவுடர், சாக்லேட் போன்ற அனைத்துப் பொருட்களையும் ஆய்வு செய்து தடை செய்ய வேண்டும்.

எஸ்.ரமேஷ் (பேப்பர் விற்பனை யாளர், எஸ்.எஸ்.காலனி, மதுரை):

மேகி நூடுல்ஸ் மீதான தடையை எப்போதோ செய்திருக்க வேண்டும். நெஸ்லே நிறுவனம் தனது தயாரிப்பில் சில மாற்றங்களை செய்து, சில அதிகாரிகளை சரிகட்டி அனுமதி கோரி மீண்டும் தங்கள் தயாரிப்புகளை விற்க வருவார்கள். அதை எந்த வகையிலும் அரசு அனுமதிக்கக் கூடாது. பாரம்பரிய உணவை உண்ண குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும்.

ஆர். கணேஷ்குமார், (அரசு ஊழியர், கோவை மாவட்டம்):

மேகி நூடுல்ஸில் கலக்கப்பட்டி ருக்கும் மோனோசோடியம் குளூடாமேட், அஜினமோட்டோ ஆகியவை மூளையை மந்த நிலைக்கு கொண்டு செல்லும். இதுபோன்ற பொருட்களை ஒவ்வொன்றாக கண்டுபிடித்து தடை செய்ய வேண்டும். உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதை முறையாக செயல்படுத்த வேண்டும். வெளிநாட்டு உணவுப் பொருட்களுக்கு பதில், உள்நாட்டிலேயே தயாராகக் கூடிய, உள்நாட்டு விளைபொருட்களைக் கொண்டு செய்யக் கூடிய சுவையான உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு கொடுத்து, உணவுப் பழக்கத்தை சீரமைக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

லஷ்மி (தனியார் நிறுவன ஊழியர், கோவை):

எனக்கு 5-ம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே மேகி நூடுல்ஸ் மிகவும் பிடிக்கும். 3 வேளை யும் அதையே கொடுத்தாலும் சாப்பிடுவேன். வீட்டிலும் வாரத் தில் 3 நாட்கள் அதை சாப் பிட அனுமதித்தனர். ஒரு கட்டத்தில் எனது கவனிக்கும் திறன் குறைந்தது. அஜீரணக் கோளாறுகள் ஏற்பட்டன. மருத்துவரிடம் சென்றபோது குடல் வால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பது தெரிந்தது.

எனது பாட்டி இதையெல்லாம் சாப்பிடக் கூடாது என்று கூறியதை நான் கேட்டதில்லை. இப்போது, திணை, கம்பு, கேழ்வரகு, வேக வைத்த பயிர்கள் போன்ற ஆரோக் கியமான உணவுகளை உட் கொள்கிறேன். நேரம் பார்க்காமல் ஓடி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசரமும்கூட துரித உணவுகளின் பெருக்கத்துக்கு ஒரு காரணம். லட்சக்கணக்கில் சம்பாதித்து கடைசியில் அதை மருத்துவமனைக்கு கொடுப் பதை விட, சரியான உணவுப் பழக்கங்களை மேற்கொள்ளலாமே.

ஆர்.கண்ணன் (ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, மேடவாக்கம், சென்னை):

நூடுல்ஸ் மீதான தடை வரவேற்கத்தக்கது. இதே போன்று பாலில் ஏற்படும் கலப்படத்தையும் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் தனியார் விற்கும் பாலில் தண்ணீர் கலப்படம் அதிகமாக உள்ளது. இது தொடர்பாக அரியலூர் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் தொடுத்த வழக்கில் பாலில் தண்ணீர் கலந்த வியாபாரிக்கு ஒன்றரை ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டது. அதே போன்று, இப்போதுள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பாலில் கலப்படத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x