Published : 10 Jun 2015 06:09 PM
Last Updated : 10 Jun 2015 06:09 PM

தாமிரபரணி அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விடுக: ஸ்டாலின்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கார் பட்டத்தில் விவசாயம் செய்வதற்கு வசதியாக தாமிரபரணி அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று ஸ்டாலின் எழுதியுள்ள முகநூல் பதிவில், ''மாநிலத்தில் உள்ள விவசாயிகளை தொடர்ந்து அதிமுக அரசு புறக்கணித்து வருகிறது. கார் பட்டத்தில் சாகுபடி செய்வதற்குத் தேவையான தண்ணீரை தாமிரபரணி அணையிலிருந்து திறந்து விடுமாறு தூத்துக்குடியில் உள்ள தாமிரபரணி ஆற்றுப் பாதுகாப்பு கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

கார் பட்டம் 9 தினங்களுக்கு முன்பே துவங்கி விட்ட போதிலும், பாசனத்திற்குரிய தண்ணீர் திறந்து விடப்படாததால் நெல் சாகுபடிக்குப் போதிய தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.

தாமிரபரணி அணையில் 21,113 ஏக்கர் நிலங்களுக்கு நீர்பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் இருந்தாலும், 8124 ஏக்கர் பாசனத்திற்கு மட்டுமே தண்ணீர் திறந்து விட்டிருக்கிறது மாநில அரசு. இதனால் சாகுபடி செய்யும் நெல்லுக்கு பாசனத்திற்குரிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள்.

இது போன்ற நிலைமயை தவிர்க்கவே, கழக ஆட்சியில் 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி-கருமேனி-நம்பியாறு நதிகள் இணைக்கும் திட்டம் அனுமதியளிக்கப்பட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அதை கிடப்பில் போட்டுவிட்டது.

2011-12 முதல் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் நதி நீர் இணைப்பிற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை இத்திட்டத்தின் எந்தப் பணியும் நடைபெறவில்லை. இந்த தாமதத்தால் நதிகளை இணைக்கும் திட்ட மதிப்பீடு மேலும் 600 கோடி ரூபாய் இப்போது அதிகரித்து விட்டது.

ஆகவே, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கார் பட்டத்தில் விவசாயம் செய்வதற்கு வசதியாக தாமிரபரணி அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும். தாமிரபரணி-கருமேனி-நம்பியாறு இணைக்கும் திட்டப் பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும் என்றும் அதிமுக அரசை வலியுறுத்துகிறேன்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x