Published : 09 Jun 2015 04:39 PM
Last Updated : 09 Jun 2015 04:39 PM

அரசு பள்ளியில் நூறு சதவீதம் தேர்ச்சிக்காக உழைத்த ஆசிரியர்களுக்கு தங்க மோதிரம் பரிசு: மாணவர்களுக்கு பதக்கம்

பத்தாம் வகுப்புத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைய பாடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊராட்சி சார்பில் தங்க மோதிரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. பள்ளி அளவில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பதக்கமும், காசோலையும் வழங்கப்பட்டது.

சிவகங்கை அருகே கல்லூரணி அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு கடந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வை எழுதிய 38 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

இதில், பள்ளி அளவில் மாணவி லாவண்யா 472 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி இந்துமதி 467 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி மாலதி 465 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர். மேலும், 16 மாணவ, மாணவியர் 400 மதிப்பெண்கள் பெற்றனர்.

கடந்த ஆண்டைப்போல இந்தாண்டும் ஆசிரியர்களைப் பாராட்டும் வகையிலும், மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் ஊராட்சி சார்பில் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கல்லூரணி ஊராட்சித் தலைவர் மீனாட்சி மோகன்குமார் தலைமை வகித்தார். முன்னாள் அரசு வழக்கறிஞர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.

இதில், தலைமை ஆசிரியர் உதயகுமார், ஆசிரியர்கள் பானுமதி (தமிழ்), பிச்சைமணி (ஆங்கிலம்), எட்வின் செல்வராஜ் (கணிதம்), ரதி ஜுலா பிளாரன்ஸ் (அறிவியல்), ராஜேஸ்வரி (சமூக அறிவியல்), ராம்குமார் (உடற்கல்வி) ஆகிய ஏழு ஆசிரியர்களுக்கு தங்க மோதிரங்கள் பரிசாக வழங்கப் பட்டன.

முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு முறையே ரூ.5000, ரூ.3000, ரூ.2000-ம் ரொக்கப் பரிசும், பதக்கமும் வழங்கப்பட்டன. மேலும், 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற 16 மாணவர்களுக்கு தலா ரூ.1,500 வீதம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

400-க்கும் குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில், ஊராட்சி துணைத் தலைவர், கிராம கல்விக் குழு உறுப்பினர்கள், ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x