

இன்று (ஜூன் 5 ) உலக சுற்றுச்சூழல் தினம்)
உலகிலுள்ள மொத்த இனங்களில் 9.13 சதவீத தாவர இனங்களும், 6.74 சதவீத விலங்கினங்களுமே இந்தியாவில் காணப்படுகின்றன. ஆனால் நிலம், நீர், வளிமண்ட லம் என அனைத்து இயற்கை வளங்களும் இன்று மாசடைந் துள்ளன.
மனித வாழ்வுக்கு உயிர் பன்மை யமாவது (பல்லுயிர் பரவல்) மிக முக்கியச் செல்வமாக உள்ளது. பல்வகை உயிரினங்களில் இருந்து உணவு, உடை, தங்குமிடம் என பயன்பாட்டுக்குத் தேவையான பொருட்களை நாம் பயன்படுத்தி வந்துள்ளோம். ஆனால், நாம் பயன்படுத்திவந்த பல செல்வங்கள் படிப்படியாக குறைந்து, தற்போது அழியும் நிலைக்கு வந்துவிட்டன.
இயற்கை வளங்களைப் பாது காக்க வேண்டும் என்ற நோக்கோடு ஐக்கிய நாடுகள் சபையால் 1972-ம் ஆண்டு உலகச் சுற்றுச்சூழல் தினம் பிரகடனம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் இயற்கை பாதுகாப்பு முழக்கத்தை முன்வைத்து சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடிவரும் ‘ஐக்கிய நாடுகள் சூழல் திட்ட மானது’ இந்த ஆண்டு “7 பில்லியன் கனவுகள், ஒரு கோள், கவனத்துடன் நுகர்வோம்” (7 billion dreams, one planet, consume with care) என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக, இந்தியாவின் வன வளங்கள் வெகுவாக குறைந்து வருவதால் இயல்பு நிலையிலிருந்து தட்ப வெப்ப நிலை மாறிப் போய்விட்டது. விலங்குகள் கடுமையான இன்ன லுக்கு ஆளாகியுள்ளன. காடுகளில் உள்ள தாவரங்கள் அழிக்கப்படுவது நிலப்பரப்பில் வாழும் உயிரின இழப்புக்கு முக்கிய காரணமாகும்.
நம்மைச் சுற்றி வாழ்ந்துவரும் இனங்களை முழுமையாக அறியாத நாம், சுமார் 25,000 தாவர இனங்களில் 10 சதவீத தாவரங் களை மட்டுமே சாகுபடி செய்து வருகிறோம். பூமியில் உள்ள பெரும்பாலான இனங்களின் பயன் பாடு நமக்கு தெரியாமலேயே அழிந்து வருகிறது.
வியாபாரம், மருத்துவம், பொரு ளாதாரத் துறையில் பல தாவர இனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால், அதிகளவில் பயன் படுத்தப்படும் இனங்கள் அரியவகை இனங்களாக மாறிவிடுகின்றன. உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆரோக்கிய பச்சை, சற்பகாந்தா, மதனகாம பூ, அழுகன்னி, தொழு கன்னி, குடும்பம் கலக்கி, காட்டுக்குறிஞ்சி, காட்டுத் திப்பிலி, மாகாளி கிழங்கு, காட்டுவள்ளிக் கிழங்கு, பூதங்காளி, பெரணி, கல்தாமரை, காட்டு சாம்பிராணி, கொடும்புளி, நிலப்பனை, வெள்ளை நாவல், சந்தனம் உள்ளிட்ட தாவரங்கள் தற்போது அழிந்து வரும் இனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அதேபோல சிங்கவால் குரங்கு, புலி, வரையாடு, காட்டுமிளா, கரடி, சிறுத்தை, புள்ளிமான், புள்ளு ருவிமான், காட்டெருமை, மரகதப்புறா, வல்லூறு, ராஜநாகம், உடும்பு, முதலை, பச்சை தவளை உள்ளிட்டவை அழியும் நிலையில் உள்ள உயிரினங்களாக கண்டறியப்பட்டுள்ளன. மக்கள் தொகை பெருக்கத்தால் உயிர் மண்டலத்தின் வீழ்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் படிப்படியாக மறைந்துவரும் தாவர இனங்களை பாதுகாத்து எதிர்காலத்தில் நிலை பெறுவதற்கான அடிப்படை திட்டங் களை தயாரிக்கும் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வள புலத் தலைவர் கி.முத்துச்செழியன் கூறியது: சூழல் முறைமை, உயிர் புவியியல் பகுதிகளை பாதுகாப்பதன் மூலம் காட்டு மிருகங்களுக்கு பாதுகாப்பான பகுதிகள் கிடைக்கும். மரபணு உருமாற்றத்துக்கும் இனம் இடப் பெயர்வுக்கும் பாதுகாப்பு பகுதிகள் ஏதுவானவையாக இருக்க வேண்டும். மாசுபாடு, நச்சுப்படிவு, வெளிநாட்டு இனங்களை அறிமுகப் படுத்துதல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.
பாரம்பரியமிக்க வேளாண்மை பயிற்சி முறையை தொடர்ந்து பயன்படுத்த ஊக்கமளிக்க வேண்டும். பாதுகாப்பு பகுதிகளை திட்டமிட்டு, மேலாண்மை செய்வ தற்கு பொதுமக்களை ஊக்குவிக்க வேண்டும்.
பாதுகாப்பு பகுதிகளில் சூழலியல் முக்கியத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும். பாதுகாப்பு பகுதிகளில் அவ்வப்போது ஆய்வு நடத்தி தற்போதைய தேவை மற்றும் எதிர்காலத் தேவைகளை திட்டமிட வேண்டும்.
அபூர்வமான தாவர இனங்களாக இருந்தால் அவற்றை அந்த பகுதிகளில் பேணிக் காப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேசிய பூங்காக்கள், காட்டுவாழ் சரணாலயங்கள் மற்றும் சேமக் காடுகளில் தாவரவியல் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் முக்கியமான தாவர, விலங்கினங்களை அழியாமல் காப்பாற்ற முடியும்’’ என்றார்.