Published : 25 Jun 2015 03:42 PM
Last Updated : 25 Jun 2015 03:42 PM

தமிழகம் முழுவதும் ரூ.14 கோடியில் புதிய திட்டங்கள்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் ரூ.14 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் கூட்டரங்கம், உற்பத்தி பொருட்கள் காட்சி மையம், அலுவலர் அறைகள், கணினி அறை, பயிற்சி அறை உள்ளிட்ட மாவட்ட தொழில் மைய அலுவலகக் கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (25.6.2015) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் கரூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய இடங்களில் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொழில் மையங்களுக்கான அலுவலகக் கட்டிடங்களை திறந்து வைத்தார்.

தருமபுரி, ஈரோடு, சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, கன்னியாகுமரி, உதகமண்டலம் ஆகிய இடங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொழில் மையங்களுக்கான கூடுதல் அலுவலகக் கட்டிடங்களையும் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

குறைந்த முதலீட்டில் அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவதன் மூலம் கிராமங்கள், சிறு நகரங்கள் மற்றும் தொலை தூரப் பகுதிகளில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் அந்தந்த பகுதிகளில் காலங்காலமாய் மேற்கொள்ளப் பட்டு வரும் பாரம்பரிய தொழில் முறைகளை பேணி காப்பதிலும் பெரும் தொழிற்சாலைகளுக்கு அத்தியாவசமாய் விளங்குகின்ற உப பொருட்களை தயாரித்து வழங்குவதன் மூலம் நாட்டின் ஒட்டு மொத்த தொழில் வளர்ச்சியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு ஈடு இணையற்றதாகும்.

இத்தகைய சிறப்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் படித்த இளைஞர்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில்முனைவோராக உருவாக்குதல், சிறுதொழில் முனைவோருக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பயிற்சி அளித்திடத் தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி வளாகம் கட்டுதல், மாவட்ட தொழில் மையங்களுக்கு புதிய அலுவலகக் கட்டிடம் கட்டுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை ஜெயலலிதா தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், கரூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் தலா 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஒவ்வொரு கட்டிடமும் தரை மற்றும் முதல் தளத்துடன் 5400 சதுர அடி கட்டிட பரப்பளவில், கூட்டரங்கம், உற்பத்தி பொருட்கள் காட்சி மையம், அலுவலர் அறைகள், கணினி அறை, பயிற்சி அறை, உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மொத்தம் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மூன்று மாவட்ட தொழில் மைய அலுவலகக் கட்டிடங்களை ஜெயலலிதா திறந்து வைத்தார்.

தருமபுரி, ஈரோடு, சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, கன்னியாகுமரி, உதகமண்டலம் ஆகிய இடங்களில் மொத்தம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொழில் மையங்களுக்கான கூடுதல் அலுவலகக் கட்டிடங்கள் என மொத்தம் 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் கூடுதல் அலுவலகக் கட்டிடங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x